| ADDED : மார் 14, 2024 04:31 AM
மாவட்டத்தை பொறுத்தமட்டில் காய்கறிகள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு இரு போகம் முதல் மூன்று போகம் வரை காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கான விதைகளை விவசாயிகள் உரக்கடைகளின் மூலம் கொள்முதல் செய்து நடவு செய்கின்றனர். இவற்றில் முளைப்புத் திறன் , காய்ப்புத் திறன் குறித்து முன்கூட்டியே தெரியாத நிலை உள்ளது. ஒவ்வொரு காய்கறி பயிர்களுக்கான பிரத்யேக ஆராய்ச்சி நிலையங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் பரிந்துரைக்கப்பட்ட தரமான விதைகளை அரசு தோட்டக்கலைத் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பூண்டு, பட்டாணி, முள்ளங்கி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கொடைக்கானலில் விளைச்சல் காணும் மலைப் பூண்டு புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதற்கான விதைகளை பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களின் மூலம் தரவு அறிக்கையின் மூலம் தேர்வு செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கும் இதுபோன்ற தரமான விதைகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி பயிர்களை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் காய்கறி பயிர்களின் முக்கியத்துவம் உணர்ந்து அவற்றை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும்.