தீபாவளி அவசர தேவைக்கு தயார் நிலையில் ஆம்புலன்ஸ்
திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு அவசர தேவைகளுக்கு உதவிட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் அவசர தேவைகளுக்கு விரைந்து உதவி செய்யும் பொருட்டு மருத்துவம், காவல், தீயணைப்பு துறைகளுடன் இணைத்து 108 ஆம்புலன்ஸ் அவசர சேவை 24 மணி நேரமும் முழு தயார் நிலையில் இருக்கவும், ஹாட்ஸ்பாட் சாலைகளின் தன்மைகளைக் கருத்தில் கொண்டு ஆங்காங்கே 108 ஆம்புலன்ஸ்கள் முன் எச்சரிக்கையாக நிறுத்தி வைக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், அக். 19, 20, 21 ல் அதிகமாக அவசர அழைப்புகள் வரும் என்பதால் அதற்கேற்றவாறு மருந்து , மருத்துவ உபகரணங்களும் தேவைக்கேற்ப இருப்பு வைக்கவும், அவசரம் 108 தமிழ்நாடு என்ற ஆப் மூலம் உதவி கேட்பவர்களை ஜி.பி.எஸ்., உதவியுடன் இடத்தை துல்லியமாக கண்டறிந்து அருகில் உள்ள 108 ஆம்புலன்சை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரம் செயல்பட்டு மக்களுக்கான மருத்துவ சேவையை துரிதமாக வழங்குவதற்காக விடுமுறை இன்றி தயார் நிலையில் ஊழியர்கள் பணிசெய்திட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ராம்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சுடலைமுத்து கூறியதாவது: மாவட்டத்தில் 36 ஆம்புலன்ஸ்கள், ஒரு டூவீலர் வாகன ஆம்புலன்ஸ் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் உள்ளது. தீக்காயங்களுக்கு முதலுதவி அளிக்க' பான்ஸ் கிட் 'வழங்கப்பட்டுள்ளது. அவசர அழைப்பு கிடைத்த 5 முதல் 7 நிமிடங்களில் சேவைக்காக தயார் நிலையில் உள்ளோம் என்றனர்.