குடிநீர் வழங்க மறுக்கிறார்கள் குறைதீர் கூட்டத்தில் முறையீடு
திண்டுக்கல்: குடிநீர் வழங்க மறுக்கிறாங்க, செங்கல் சூளையை தடுத்து நிறுத்துங்க என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலரும் முறையிட்டனர். கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 221 மனுக்கள் பெறப்பட்டதில் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இருவருக்கு தலா ரூ.20,000 வீதம் இயற்கை மரணம் நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக ஒருவருக்கு ரூ.11,445 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல அலுவலர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். குடீநீர் வழங்க மறுப்பு ஒட்டன்சத்திரம் தேவத்துார், தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், இதுவரை நல்ல குடிநீர் வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் நடக்கிறது. காவிரி குழாய் இருந்தும் தண்ணீர் மறுக்கப்படுகிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. பழநி அருகே வடக்குவாடிப்பட்டியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. சுற்றிலும் தென்னை, வாழை உட்பட பல்வேறு விவசாயம் நடக்கிறது. , ஐவர் மலை, நீர்தேக்கம், விவசாயப்பகுதிகள் என சுற்றியும் உள்ள பகுதிகளில் செங்கல் சூளை அமைய உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.