ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் துவக்கம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட் கடைகளில் வியாபாரத்தை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் எதிரே தென்னிந்தியாவின் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டாக காந்தி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த மார்க்கெட் ரூ. 29 கோடி மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி, பார்க்கிங், ஏ.டி.எம், சி.சி.டிவி., கேமரா பாதுகாப்பு, உணவகங்கள், தேநீர் கடை வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு காய்கறி மார்க்கெட் என்ற பெயரில் புதுப்பொலிவுடன்செயல்பட தொடங்கியுள்ளது. விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் முருங்கை, வெண்டை, கத்தரி, பீன்ஸ், அவரை, கேரட் ,பீட்ரூட் ,பச்சை மிளகாய், எலுமிச்சை, சுரைக்காய், மல்லி, புதினா, கோவக்காய், தேங்காய், மாங்காய் என அனைத்து காய்கறிகளும் மதியம் 1:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை சூழ்நிலைக்கு ஏற்ப ஏலம் விடப்படும். சில்லறை வியாபாரம் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை நடைபெறும். உள்ளே வரும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் முற்றிலும் இலவசம். சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் மார்க்கெட் வளாகத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று மார்க்கெட் கடைகளில் வியாபாரத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். ஆர்.டி.ஓ., கண்ணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, நகராட்சி தலைவர் திருமலைசாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, தி.மு.க., மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஆர்.கே.பாலு, மார்க்கெட் செயலாளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம், கிளைச் செயலாளர் சரவணன் பங்கேற்றனர்.