| ADDED : டிச 31, 2025 06:08 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நுழைந்து வெளியே வரும் பகுதியை மாற்றினால் பயணிகள் சிரமமின்றி பஸ் ஏற வசதியாக இருக்கும். ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டின் நடுப்பகுதியில் கடைகள் கட்டப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதியில் உள்ளூர் கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ் , மேற்குப் பகுதியில் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்படுகின்றன. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட்டானது மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களை தொழில் வளம் செறிந்த மாவட்டங்களான திருப்பூர், கோவை உடன் இணைக்கும் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. நத்தம், திண்டுக்கல் பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் ஒட்டன்சத்திரம் வரை பழநி செல்லும் பஸ்களில் வந்திறங்கி திருப்பூர், கோவை செல்லும் பஸ்களில் பயணிப்பது அதிகம். மேலும் ஒட்டன்சத்திரம் வழியாக பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 600க்கும் அதிகமான பஸ்கள் இங்கு வந்து செல்கின்றன. இங்கு இறங்கி மற்ற ஊர்களுக்கு பஸ் ஏறி செல்லும் பயணிகள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உள்ளது. பழநி, தாராபுரம் வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் பஸ்ஸ்டாண்ட் மேற்குப்புற சுற்றுச் சுவரை ஒட்டி நிறுத்தப்படுகிறது. தற்போது கிழக்கு பகுதியில் பஸ்கள் நுழைந்து மேற்குப்பகுதியில் வெளியேறுகின்றன. இந்த முறையை மாற்றி அமைத்து மேற்குப் பகுதியில் பஸ்கள் நுழைந்து கிழக்குப் பகுதியில் வெளியே செல்லும்படி அமைக்க வேண்டும். அப்போதுதான் பயணிகள் சிரமமின்றி பஸ் ஏறுவதற்கு வசதியாக இருக்கும்.