உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மத்திய அரசு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் அரிசி ஆலை சம்மேளன தலைவர் துளசிங்கம் பேட்டி

மத்திய அரசு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் அரிசி ஆலை சம்மேளன தலைவர் துளசிங்கம் பேட்டி

திண்டுக்கல்; ''மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கவுன்சில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்,'' என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் துளசிங்கம் கூறினார்.அவர் கூறியதாவது: மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் 2022 ஜூன் 28ல் சண்டிகரில் நடந்த கூட்டத்தில் அரிசி அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பிராண்ட் அடிப்படையில் வரி விதிப்பு இல்லை என முடிவு செய்தது. அதே நேரத்தில் அரிசி, கோதுமை, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் லீகல் மெட்ரோலஜி ஆக்ட்டின்படி 25 கிலோ, அதற்கு கீழ் எடையில் உள்ள அரிசி பையில் அடைத்து குறியீடுகளோடு விற்பனை செய்தால் 5 சதவீத வரி என அமல்படுத்தியது. இதனால் நடுத்தர சாமானிய மக்கள் அரிசி, அத்தியாவசிய உணவுப்பொருட்களை வாங்குபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தங்கள் குடும்ப தேவைக்கு ஏற்றவாறு 5 கிலோ, 10 கிலோ என வாங்குபவர்கள் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படுவர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி., கவுன்சில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மீதான 5 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும்.தமிழக அரசு நெல்லிற்கு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும். தமிழக வேளாண்மை விற்பனை சட்டம் விவசாய நலன் கருதி வேளாண்மை விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படும் உணவு தானியங்களுக்கு சந்தை கட்டணம் நிர்ணயம் செய்தது. வேளாண்மை துறை அதிகாரிகள் அரிசி ஆலை உரிமையாளர்களிடமும் நேரடியாக விவசாயிகளிடம் வாங்கும் நெல்லிற்கும் வெளி மாநிலத்திலிருந்து வாங்கும் நெல்லிற்கும் சந்தை கட்டணம் வசூல் செய்வது ஏற்புடையது இல்லை. வேளாண்மை துறை அமைச்சர், செயலாளரிடம் முறையிட்டுள்ளோம். எனவே முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி