கார் விபத்தில் சென்னை வாலிபர் உயிரிழப்பு
வடமதுரை; திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர் பலியானார்.சென்னை நங்கநல்லுாரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 28. அதே பகுதியை சேர்ந்த தன் நண்பர்கள் யோகேஸ்வரன், 32, சுரேஷ்குமார், 46, கார்த்திக், 32, ஆகியோருடன் சபரிமலைக்கு காரில் சென்றார். அங்கு தரிசனம் முடித்து, திண்டுக்கல் - திருச்சி நான்குவழிச் சாலையில், வடமதுரை தங்கம்மாபட்டி அருகே நேற்று முன்தினம் இரவு 12:30 மணியளவில் சென்றபோது கார் டயர் வெடித்தது.இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மையத்தடுப்பில் மோதி ரோட்டில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில், காரின் முன் இருக்கையில் இருந்த யோகேஸ்வரன் வெளியே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.