ஆக்கிரமிப்பால் கழிவு நீர் சங்கமமாகும் சின்னக்குளம்
ஒட்டன்சத்திரம்: ஆக்கிரமிப்பால் ஒட்டன்சத்திரம் சின்னகுளம் கழிவு நீர் சங்கமமாகும் நிலையில் விவசாயிகள் பாதிக்கின்றனர்.ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் சின்ன குளம் அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக சென்று குளத்தை அடைகிறது. நாளடைவில் நீர்வரத்து ஓடை ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கிப் போக ஓடையானது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் நகரின் கழிவுநீர் சங்கமமாகும் இடமாக சின்னகுளம் மாறிவிட்டது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்தாலும் தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி காணப்படுகிறது. ஆக்கிரமிப்பை சரிவர அகற்றாமல் வேலி அமைத்து கரைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. நீர் வெளியேறும் பாதையிலிருந்து செல்லும் வாய்க்கால் முற்றிலும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. செடிகள் முளைத்து கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவு மறைத்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ. கோடிக்கணக்கில் குளத்தின் கரைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டும் இன்றளவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் நடைபாதை பகுதிகளில் செடிகள் முளைத்து வீணாகி உள்ளது. விளைநிலங்களில் புகும் நீர்
நல்லுசாமி, விவசாயி: சின்ன குளத்தில் முளைத்துள்ள ஆகாயத்தாமரைகளை அவ்வப்போது அகற்ற நடவடிக்கைஎடுக்க வேண்டும். மறுகால் செல்லும் வாய்க்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தேங்காமல் செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும். பைபாஸ் ரோட்டில் இந்த வாய்க்கால் செல்லும் பாலம் சிறிதாக இருப்பதால் தண்ணீர் தேங்கி விளைநிலங்களுக்கு சென்று விடுகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். பாலத்தை அகலப்படுத்தி தண்ணீர் தேங்காமல் செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரியும் பலன் இல்லை
ராஜேந்திரன், நீரினை பயன்படுத்துவோர் சங்க கூட்டமைப்பு சங்க செயலாளர்: சின்னகுளத்தை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கரைகளில் பேவர் பிளாக் கற்களை பதித்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற பல முறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் கற்கள் சில இடங்களில் சிதிலமடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். குளம் மறுகால் செல்லும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளத்தில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.