ரிங் ரோடு நிலங்களுக்கு இழப்பீடு: போராட்டம் அறிவிப்பு
திண்டுக்கல்: ரிங் ரோடு அமைக்க கையகப்படுத்தும் விளை நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி மே 26ல் கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் - திருச்சி ரோட்டிலிருந்து - மதுரை பைபாஸ் சாலையை இணைக்கும் ரிங் ரோடு அமைக்கும் பணி திண்டுக்கல் ஒன்றியப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதற்கு விளை நிலங்கள் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நிலங்களுக்கு உரிய இழப்பீடு கோரி மே 26ல் திண்டுக்கல் கலெக்டரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம்அரசனம்பட்டியில் நடந்தது. பல்வேறு கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சரத்குமார் பங்கேற்றனர்.