உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பராமரிப்பின்றி வலுவிழக்கும் பழநி பாதயாத்திரை வழித்தடம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீடிக்கும் அலட்சியம்

பராமரிப்பின்றி வலுவிழக்கும் பழநி பாதயாத்திரை வழித்தடம் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நீடிக்கும் அலட்சியம்

செம்பட்டி : பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கான வழித்தட சீரமைப்பு, பராமரிப்பில் அலட்சியம் நீடிக்கிறது. ரோடு விரிவாக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணியை பக்தர்களுக்கு முழுமையாக பலனளிக்கும் வகையில் மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி தைப்பூச விழாவிற்காக தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை போன்ற வெளி மாவட்ட பக்தர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் துாரம் பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசம் மட்டுமின்றி பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை மாத கிருத்திகை என பெரும்பாலான விசேஷ நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களின் பாதயாத்திரை அதிளவில் தொடர்கிறது. மாவட்டத்தில் திண்டுக்கல் -ஒட்டன்சத்திரம் வழித்தடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் 63 கிலோமீட்டர் துாரத்திற்கு ரோட்டின் ஓரமாக பேவர் பிளாக் கற்களால் தனியாக நடைபாதை அமைக்கப்பட்டது. பலக்கனுாத்து-செம்பட்டி தடத்திலும் ரோட்டோரத்தில் பாதயாத்திரை வழித்தடத்திற்கான பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போதிய பராமரிப்பின்றி பெரும்பாலான இடங்களில் நடைபாதை சேதம் அடைந்தது. வழித்தட கிராமங்களில் தனியார் கடைகள், வீடுகளுக்கான முன் பகுதியை நீட்டித்து ஆக்கிரமித்துள்ளனர். பிற இடங்களில் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. பாதயாத்திரை நடைபாதை முழுமையாக புதுப்பிக்கும் பகுதிகளிலும் அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால் பல இடங்களில் அகலம் குறுகில மழைநீர் கடந்து செல்லும் குழாய்கள் சேதமடைந்த பயனற்ற சூழலில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.,பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வழித்தடத்தின் பயன் முழுமையாக பக்தர்களுக்கு கிடைக்கும் வகையில் இப்பிரச்னைகளை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடரும் மெத்தனம்

பரமசிவம்,தொழிலாளி, கன்னிவாடி : ஆண்டுதோறும் பழநி தைப்பூச விழாவிற்காக வெளி மாவட்ட பக்தர்கள் நுாற்றுக்கணக்கான கிலோமீட்டர் துாரம் பாதயாத்திரை செல்கின்றனர். தைப்பூசம் மட்டுமின்றி பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, மாத கிருத்திகை என பெரும்பாலான விசேஷ நாட்களில் தரிசனம் செய்ய பக்தர்களின் பாதயாத்திரை கணிசமான அளவில் தொடர்கிறது. பெரும்பாலான இடங்களில் போதிய அகலமின்றி குறுகலாக அமைத்துள்ள நடைபாதை அதிக பக்தர்கள் வருகை போது பயனற்ற சூழலுடன் இடையூறு ஏற்படுத்தும்.இதை சரி செய்வதில் அதிகாரிகள் மெத்தனம் நீடிப்பதால் பக்தர்கள்பாதிக்கும் அபாயம் உள்ளது.

-கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆர்.ரமணன் கல்லூரி மாணவர், செம்பட்டி : ரெட்டியார்சத்திரம், செம்பட்டி, கன்னிவாடி வழித்தடங்களில், பாதயாத்திரை பக்தர்கள் வருகை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப பக்தர்களுக்கான நடைபாதை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் பெயரளவில் கூட கண்காணிப்பது இல்லை. காமலாபுரம் வரை தொடர்ச்சியாக பாதயாத்திரை வழித்தடம் இல்லை. பல இடங்களில் பக்தர்கள் நடப்பதற்கு குறுகலான ரோட்டை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. பாதயாத்திரை வழித்தடத்தில் ரோட்டோர ஓட்டல், டீக்கடை, உணவு பலகாரம், பழங்கள், இளநீர் விற்பனை என வழி நெடுகிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரிப்பு வழக்கமாகி விட்டது. தார் ரோட்டின் விளிம்பு வரை கூடாரம், பக்தர்கள் அமர நாற்காலிகள் என ஆக்கிரமிக்கின்றனர். சீசன் நேரங்களில், பக்தர்கள் நடுரோட்டில் நடப்பதால் விபத்துகள் தொடர்கிறது.

ஏற்பாடுகளில் அலட்சியம்

மோகன் ,பேரூராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர், கன்னிவாடி : பேவர் பிளாக் பணிகள் பல இடங்களில் மேடு பள்ளங்களுடன் புதர்ச்செடிகள் மண்டி உள்ளன. பாதயாத்திரை வழித்தடத்தில் உள்ளாட்சி அமைப்புகள் பல குப்பை கழிவுகள் குவிக்குமிடமாக மாற்றியுள்ளன. பாதயாத்திரை தங்குமிடங்களில் போதிய தண்ணீர், சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. இவற்றை அதிகாரிகள் கண்காணிக்காத நிலையில் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கிறது. குறுகிய திருப்பங்களில் எதிர்வரும் வாகனங்களை தெரிந்து கொள்வதற்கான குவி கண்ணாடிகள் பெயரளவில் அமைத்தனர். இவற்றில் பல சேதமடைந்தும் சீரமைக்கவில்லை. செம்பட்டி தடத்திலான பல புறநகர் பஸ்கள் ரெட்டியார்சத்திரம் ரோட்டில் செல்கின்றன. நடக்க முடியாத பக்தர்கள் வசதிக்காக பாதயாத்திரை அதிகரிக்கும் நேரங்களில் காமலாபுரம்-ஒட்டன்சத்திரம் இடையே கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !