கொடை ஏரியில் வலுவிழந்து விழும் அலங்கார மின்கம்பம்
கொடைக்கானல்: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரியைச் சுற்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின்விளக்கு கம்பங்கள் வலுவிழந்து ஆங்காங்கு நடைபாதையில் விழுவதால் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கொடைக்கானல் ஏரியில் 3 ஆண்டுகளாக ரூ.24 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 5 கி.மீ., ஏரியை சுற்றி அலங்கார மின்விளக்குகள் அமைக்க மின் கம்பங்கள் ஓராண்டாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக தரைத்தளம் கரையோரம் குறைவான ஆழத்தில் தோண்டி கான்கிரீட் அமைக்கப்பட்டு மின்கம்பம் பொருத்தப்பட்டுள்ளன. அடித்தளம் வலு விழுந்த நிலையில் லேசான காற்றுக்கு கூட தாக்குபிடிக்காமல் கம்பங்கள் சாய்ந்து வருகின்றன. இப்பகுதியில்தான் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, ஏரியின் அழகை ரசிப்பது உள்ளிட்ட பொழுது போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தரமற்ற நிலையில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களால் பயணிகள் திக்..திக்... மனநிலையில் நடைப்பயிற்சி, படகு சவாரி சென்று வரும் சூழல் உள்ளது. ஏரியைச் சுற்றி அமைத்த அலங்கார மின்விளக்குகள் உறுதித் தன்மையுடன் இல்லாதது குறித்து நகராட்சி நிர்வாகத்தில் புகார் தெரிவித்த போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தரமற்ற மின் கம்பங்கள் அமைக்கும் பணிக்கு துணை போகின்றனர். நாள்தோறும் விபத்து அபாயத்தில் சென்று வரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தற்போதுள்ள மின்கம்பங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.