எங்கும் சுகாதாரக்கேடு; கொட்டமடிக்கும் கொசுக்கள் பரிதவிப்பில் திண்டுக்கல் 12வது வார்டு மக்கள்
திண்டுக்கல் : சாக்கடைகளில் இறைச்சிக்கழிவுகள், தெருக்களில் சுற்றும் நாய்கள், மேடு பள்ளங்களாக கிடக்கும் ரோடுகள், கொட்டமடிக்கும் கொசுக்கள் என திண்டுக்கல் மாநகராட்சி 12வது வார்டு மக்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.கோபாலசமுத்திரம், நாராயணாநகர், கிருஷ்ணாராவ்தெரு, சரஸ்வதி காலனி, பிள்ளையார்பாளையம் உள்ளடக்கிய இந்தவார்டில் எங்கும் சுற்றும் தெருநாய்களால் சிறார்கள் முதல் முதியவர்கள் என அனைவரும் அச்சப்படுகின்றனர். ரோட்டில் நடந்து செல்வோரை கொடூரமாக தாக்குகின்றன. டூவீலர்களில் செல்வோரையும் துரத்துகின்றன. இதோடு மாலை 6:00 மணி ஆரம்பித்ததும் விருந்தாளிகள் போல் கொசுக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. இப்பிரச்னையால் மக்கள் இரவில் துாக்கத்தை தொலைக்கின்றனர். கொசுக்களால் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொசு மருந்து அடிக்க யாரும் வருவதே இல்லை. முக்கிய பிரச்னையாக ஓட்டல்களிலிருந்து வெளியேற்றும் இறைச்சி கழிவுகள் சாக்கடைகளில் தேங்கி தொற்றுநோயை பரப்புகின்றன. தொடர்ந்து இதேநிலை நீடிப்பதால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ரோடெங்கும் சிதறி கிடக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. தெருவோரங்களில் மழைநீர் வடிகால்கள் சேதமாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் சீரமைக்கப்படாததால் மழைநீர் தேங்கி தனித்தீவு போல காட்சியளிக்கின்றன. தெருக்களில் இருபுறமும் மரங்கள் வளர்ந்து மின் ஒயர்களில் உரசி விபத்த்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்வதோடு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் இப்பகுதியினர் அதிருப்தியில் உள்ளனர். கொசு மருந்து அடிக்கலாமே
விஜயலட்சுமி,கிருஷ்ணாராவ் முதல் தெரு: எங்கள் பகுதியில் கொசுப்பிரச்னைகள் அதிகமாக உள்ளது. ஜன்னல்களில் கொசு வலைகள் இருந்தாலும் எப்படியாவது வீட்டிற்குள் நுழைந்து கடிக்கிறது. சாக்கடைகளில் வரும் ஓட்டல் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இக்காரணத்தால் புதிய நோய்களும் வருகின்றன. நாய்களை கட்டுப்படுத்துங்க
காசிவிஸ்வநாதன்,கிருஷ்ணாராவ் முதல் தெரு: இரவில் மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு நாய்கள் தொல்லை உள்ளது.டூவீலர்களில் செல்பவர்களையும் காரணமின்றி துரத்துகின்றன . கார்களை நிறுத்தினால் உள்ளே படுக்கிறது. துரத்தினால் கடிக்க சீறுகிறது. மாநகராட்சி இதை கட்டுப்படுத்தவேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
ரவிச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர், திண்டுக்கல்: கொசுக்கள் பரவும் விதமாக இருக்கும் இடங்களில் கொசு மருந்துகள் அடிக்கப்படும். ஆக்கிரமிப்புகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாய்கள் பிரச்னைகள் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். மக்கள் எந்த பிரச்னைகளாக இருந்தாலும் தெரிவிக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.