திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீடு, வத்தலகுண்டுவில் உள்ள அவரது மில்களில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 7:30 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் கோஷங்களை எழுப்பினர். திண்டுக்கல் ஆர்.எம்.காலனி வள்ளலார் தெருவில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா வீடு உள்ளது. இங்கு நேற்று மதியம் 1:30 மணிக்கு இரண்டு காரில் வந்த ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 4 பேர் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே கடந்த ஆக., 16, 17 ல் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு, மகன் செந்தில்குமார் எம்.எல்.ஏ., மகள் இந்திரா வீடுகள், இந்திராவுக்கு சொந்தமான செம்பட்டி, வத்தலகுண்டு மில்களில் அமலாக்கதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இந்திராணி வீட்டில் மட்டும் 15 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு நடந்ததாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த நேற்று ஜி.எஸ்.டி., நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இச்சோதனை நடத்தினர். இத்தகவல் அறிந்து தி.மு.க.,வினர் இந்திராவின் வீடு முன்பு திரண்டனர். இந்திரா வீட்டின் வாசலில் துணைமேயர் ராஜப்பா, வழக்கறிஞர் அமர்ந்திருந்தனர். அவர்களை வெளியே செல்லும்படி அதிகாரிகள் கூறினர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து இருவரும் வெளியில் வந்தனர். மாலை 5:00 மணிக்கு எம்.எல்.ஏ., செந்தில்குமார் மனைவி மெர்சி இந்திரா வீட்டிற்கு வந்தார். அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இரவு 7: 45 மணிக்கு அதிகாரிகளுக்கு எதிராக தி.மு.க., வினர் கோஷமிட்டனர். அவர்களை துணை மேயர் சமாதானப்படுத்தினார். இந்திராவின் கணவர் துவாரநாதனுக்கு சொந்தமான வத்தலகுண்டு ஒட்டுப்பட்டி அலமேலு அம்மாள் கெயினப் மில்களிலும் 8 பேர் கொண்ட ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரு இடங்களிலும் மதியம் 1:30 மணிக்கு தொடங்கி இரவு 9:00 மணிக்கு முடிந்தது. வீட்டிற்குள் நுழைந்த வழக்கறிஞர்கள் முன்னதாக இந்திரா வீட்டின் முன் காத்திருந்த தி.மு.க.,வினர் நேற்றிரவு 7.45 மணிக்கு வீட்டின் நுழைவுவாயில் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். 6 மணி நேரத்துக்கும் மேலாக என்ன சோதனை என கூச்சலிட்டனர். இதையடுத்து இந்திரா, மெர்சி ஆகியோர் தி.மு.க.,வினரை சமாதானப்படுத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது ஜி.எஸ்.டி., அதிகாரிகள், கணக்கு வழக்கு தொடர்பான சோதனைகள் மட்டுமே நடைபெறுவதாகவும், தேவை எனில் வழக்கறிஞர்கள் வீட்டுக்குள் வந்து பார்வையிடலாம் என்றனர். இதையடுத்து இரு வழக்கறிஞர்கள் மட்டும் இந்திராவின் வீட்டுக்குள் சென்றனர்.