மக்களை திசை திருப்ப தி.மு.க., முயற்சி;முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன்
வத்தலக்குண்டு: ''ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதால் அவர்களை திசை திருப்பும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டு வருவதாக'' முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேசினார்.அ.தி.மு.க., சார்பில் வத்தலக்குண்டில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:மக்கள் எண்ணம் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக உள்ளது. அதனை மறைக்க ஆட்சியாளர்கள் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். தேவையே இல்லாமல் ஹிந்தி பிரச்னை, மாநில சுயாட்சி என தங்கள் மீது உள்ள தவறுகளை நினைக்க விடாமல் திசை திருப்புகின்றனர். தமிழகத்தில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்னை, பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு என நாள்தோறும் புது புது பிரச்னைகள் வெடிக்கின்றன. இதனால் ஆட்சி காலம் நிறைவடையும் முன்பு ஆட்சி கவிழும் அபாயம் உள்ளது என்றார்.கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் அன்னக்களஞ்சியம், சுதாகர், நகர செயலாளர் பீர்முகம்மது தலைமை வகித்தனர். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, நகர செயலாளர்கள் தண்டபாணி, சேகர், மாசாணம் ,தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் முத்தையா வரவேற்றார். மாநில இலக்கிய அணி செயலாளர் வைகைச் செல்வன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., தேன்மொழி பேசினர். பேரவை மாநில இணைச்செயலாளர் கண்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் வளர்மதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபாண்டியன், பேரவை செயலாளர் தங்கபாண்டியன் பங்கேற்றனர். அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.