விவசாயிகள் முதுகில் குத்த வேண்டாம் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி உருக்கம்
பழநி:''விவசாயிகள் முதுகில் அரசியல்வாதிகள் குத்த வேண்டாம்,'' என பழநியில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கூறினார்.அவர் கூறியதாவது: கள் இறக்குவதையும், ஆடு மாடு மாநாடு நடத்தியதையும், மரங்கள் மாநாடு நடத்த இருப்பதையும் குறித்து தெளிவான கண்ணோட்டம் இல்லாமல் சிலர் விமர்சிக்கின்றனர். கள் இறக்குவதும் பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உணவு தேடும் உரிமை. அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் விவசாயிகள் முதுகில் குத்த வேண்டாம். கள் விடுதலை மாநாடு ஜூலை 27 திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடக்கவுள்ளது. இம்மாநாடு நடத்த தடை விதிக்க கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மனு அளித்துள்ளார். அவர் டாஸ்மாக் மது குறித்து விமர்சனங்களை வைக்க வேண்டியது தானே. புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விவசாயிகள் முதுகில் குத்தாமல் அவர்கள் கள் இயக்கத்துக்காக வாதிட வேண்டும். கள் தடை செய்யப்பட வேண்டிய மது என நிரூபித்தால் கள் இயக்கம் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும். அவர்களுக்கு ரூ.10 கோடி தரப்படும்.ஓரணியில் தமிழ்நாடு என முதல்வர் ஸ்டாலின், மக்களை காப்போம் என முன்னாள் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் நோக்கம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். இவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. காவிரி நீரை கர்நாடகா மாநிலம் முறையாக வழங்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து காவிரி மேலாண்மை வாரியம் கண்டுகொள்ளாதது குறித்து சட்டசபையில் விவாதிக்கவில்லை. இதில் யாரும் அக்கறையும் கொள்ளவில்லை.காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக தினந்தோறும் நீர் பங்கீடு வழங்க வேண்டும். டிசம்பரில் கள் விடுதலை மதுவிலக்கு மாநாடு நடைபெறும். இதில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கலந்து கொள்கிறார் என்றார்.