| ADDED : மே 16, 2024 05:57 AM
திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிலும் மலைகள் உள்ளன. இவற்றில் குரங்குகள், யானைகள், பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளன.மரங்களை வெட்டி வனப் பகுதிகளை அழித்து வந்த நிலையில் தற்போது மது பிரியர்களால் வனத்திற்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகள் , மலைப்பகுதி ரோடு வழியாக செல்வோர் சிலர் ரோட்டின் ஓரங்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் அங்கேயே மது பாட்டில்களை உடைத்து வீசியும் செல்கின்றனர்.உடைக்கப்பட்ட கண்ணாடி மது பாட்டில்கள் வனப்பகுதியில் சிதறி கிடப்பதால் இரவு நேரங்களில் வரும் வனவிலங்குகள் கால்களை பதம் பார்க்கின்றன. அடுத்தடுத்து மது பாட்டில்கள் குவிந்த வண்ணம் இருப்பதால் மண்வளம் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் ,பிளாஸ்டிக் பைகளையும் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். மீதமான உணவு பொருட்களுடன் துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கேரி பைகளை வனவிலங்குகள் உண்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. மேலும் சிலர் புகை பிடித்து விட்டு அணைக்காமல் அப்படியே போட்டு விடுவதால் வனத்தில் தீ பிடிக்கிறது. இதனால் வனத்தில் உள்ள விலை உயர்ந்த மரங்கள் ,வனவிலங்குகள் அழியும் நிலை ஏற்படுகிறது. வனவிலங்குகள் , சுற்றுச்சூழலை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.