ஊருக்குள் புகுந்த காட்டுபன்றிகளால் மக்கள் அச்சம் விளை நிலங்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை
வத்தலக்குண்டு: கீழகோவில்பட்டியில் இரவு நேரங்களில் ஊருக்குள் புகும் காட்டுப் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதோடு விளை நிலங்களும் சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.கடவாக்குறிச்சி மலைப் பகுதியில் காட்டுப் பன்றிகளின் இனப்பெருக்கம் அதிகரித்து உள்ளது. மலை அடிவாரப் பகுதிகளான கோம்பைப்பட்டி, சிவஞானபுரம், குல்லிசெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவுக்காக கீழே இறங்கும் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துகின்றன. மலைப் பகுதியில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் அடிவாரப் பகுதி அடர்ந்த புதர்களில் கூட்டமாக தங்கி விளை நிலங்களை சேதப்படுத்த தொடங்கி உள்ளன. கீழ கோவில்பட்டி கிராமத்திற்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி உள்ளன. தென்னங்கன்று, வாழை, கொய்யா உள்ளிட்ட மர கன்றுகளை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள் மானாவாரி பயிர்களையும் விட்டு வைப்பதில்லை. காட்டுப்பன்றிகள் ஊருக்குள் நடமாட தொடங்கி இருப்பதால் இரவு நேரங்களில் தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகள் ,பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் அலட்சியம் காட்டாமல் காட்டுப்பன்றிகள் ஊருக்குள் புகுவதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.சேதப்படுத்திய நிலத்தை ஆய்வு செய்த வனத்துறையினர் கூறியதாவது: காட்டுப்பன்றிகள் ஊருக்குள் வருவது முதல் முறையாக உள்ளது. தண்ணீர் தேடி வந்திருக்கலாம். நிலத்திற்குள் காட்டுப் பன்றிகள் வராதவாறு சேலைகளை கொண்டு வேலி அமைத்திட வேண்டும் என்றனர்.