சென்னையில் உழவர் திருவிழா விவசாயிகளுக்கு அழைப்பில்லை
வேடசந்தூர்: சென்னையில் நடைபெறும் உழவர் திருவிழாவிற்கு விவசாயிகளை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லாததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும், உழவர் திருவிழா நடத்தபடுகிறது. கடந்த ஆண்டு ஈரோட்டில் நடந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர். நடப்பு செப்.27, 28 தேதிகளில் சென்னையில் உழவர் திருவிழா நடக்கிறது. இந்நிலையில், திண்டுக்கல்லில் கடந்த வாரம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும், உழவர் திருவிழா நடைபெறுவது குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாளை விழா நடக்கவுள்ள நிலையில் விவசாயிகளுக்கு எந்த அழைப்பும் இல்லை என்ற குமுறல் எழுந்துள்ளது. இது குறித்து விவசாய உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர், சவடமுத்து கூறுகையில்,' கடந்த ஆண்டு ஈரோட்டில் நடைபெற்ற உழவர் திருவிழாவிற்கு 10 வாகனங்களில் விவசாயிகளை, அட்மா திட்டத்தின் கீழ் அழைத்துச் சென்றனர். தற்போது சென்னையில் நடைபெறும் விழாவிற்கு இன்னும் எந்த அழைப்பும் இல்லை. அழைப்புக்காக காத்திருக்கிறோம்' என்றார்.