உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விலைக்கு வாங்கிய குப்பை தொட்டிகள் வீணடிப்பு! தொற்று பரப்பும் மையங்களாகும் அவலம்

விலைக்கு வாங்கிய குப்பை தொட்டிகள் வீணடிப்பு! தொற்று பரப்பும் மையங்களாகும் அவலம்

ரெட்டியார்சத்திரம் : உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியத்தால் சுகாதாரம் காக்க ரூ. பல லட்ச ரூபாயில் வாங்கிய குப்பைத் தொட்டிகளை கண்டுகொள்வதில்லை. இதன் காரணமாக கழிவுகளில் மூழ்கிய குப்பைத் தொட்டிகள் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.நகர், கிராமம் பாகுபாடின்றி மக்களின் அடிப்படை வசதிகளாக குடிநீர் ,கழிப்பறைகள் உள்ளன. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் சேகரமாகும் கழிவுகளை தெருக்களில் வீசுவதால் சுகாதாரம் பாதிப்பை தவிர்க்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நடைமுறை சிக்கல்களை காரணம் கூறி இதனை முறையாக செயல்படுத்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டுகின்றன.மக்கும், மக்காத குப்பை என பிரித்து உர தயாரிப்பிற்கு பயன்படுத்த ஏதுவாக இத்திட்டத்தில் கழிவுகளை சேகரிக்க பல லட்சம் ரூபாயில் இரும்பு குப்பைத்தொட்டிகள் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டன. ஆனால் அடுத்த சில நாட்களிலே இவற்றின் பயன்பாடு முடங்க துவங்கியது. தற்போது பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் இத்தொட்டிகள் பயன்பாடின்றி குப்பையோடு குப்பையாக மட்க துவங்கி உள்ளன.துாய்மை பணியாளர்களோ கழிவுகளை சேகரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். இதனால் பல இடங்களில் கழிவு அகற்றப்படாமல் குப்பை கழிவுகளில் மூழ்கி கிடக்கின்றன. சிலர் குப்பைத் தொட்டியிலே கழிவுகளை தீயிட்டு எரிக்கின்றனர்.மழைக்காலம் மட்டுமின்றி எல்லா நாட்களிலும் சுகாதாரம் காக்கவேண்டிய தொட்டிகள்தொற்று நோய் பரப்பும் மையங்களாக மாறி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் செயல்படும் விதத்தை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மைக்கு மூடுவிழா

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பெயரளவில் கூட பல இடங்களில் செயல் படுத்தப்படாத சூழல் நிலவுகிறது. பணியாளர் பற்றாக்குறை, குப்பை சேகரிப்பு வண்டி பழுது என ஏதேனும் காரணத்தைக் கூறி தவிர்க்கின்றனர். கண்ட இடங்களில் வணிக நிறுவன, குடியிருப்பு, பாலிதீன், மருத்துவ கழிவுகள் குவிக்கப்படுகின்றன. துாய்மை பணியாளர்களே இவற்றை எரிப்பதால் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றன . மழை நீர் தேங்குவதால் பல குப்பை தொட்டிகள் கொசு உற்பத்தி மையங்களாக மாறி தொற்றை பரப்பி வருகின்றன. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழிவு சேகரிப்பு துவங்கி உர தயாரிப்பு வரை கண்காணிக்க பணியாளர்கள் உள்ளனர். இருந்தும் ச உள்ளாட்சி அமைப்புகளில் இதே அவலம் தொடர்கிறது. குடியிருப்புகளை சூழ்ந்துள்ள புகைமண்டலம், தொற்றுக் கிருமி அதிகரிப்பு பிரச்னைகள், மக்களை வீடு தேடி சென்று நோயாளிகளாக மாற்றி வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். க.உமாமகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட துணை த்தலைவர், கன்னிவாடி.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி