உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தாராளம் *மாவட்டத்தில் கனிமவளம் கொள்ளை ... *அரசியல் குறுக்கிடால் அதிகாரிகள் தயக்கம்

 தாராளம் *மாவட்டத்தில் கனிமவளம் கொள்ளை ... *அரசியல் குறுக்கிடால் அதிகாரிகள் தயக்கம்

திண்டுக்கல்: இயற்கை வளம் மிக்க திண்டுக்கல் மாவட்டத்தில் சமீபகாலமாக கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளது. மலைகள், நீர் வழித்தடங்கள், இயற்கை வனப்புகளை அழித்து கருங்கல், மணல் திருட்டு நடைபெறுகிறது. இதை தட்டிக் கேட்க வேண்டிய அதிகாரிகளும் போலீசும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.மாவட்டத்தில் நுாாற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கல், மணல் குவாரிகள் உள்ளது. இதில் முறையாக செல்லத்தக்க வகையில் உரிமம் பெற்று இயங்குபவை மிக குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. மீதி உள்ள இடங்களில் செயல்படும் குவாரிகள் காலாவதியான உரிமத்துடன் சட்டவிரோதமான வழியில் இயக்கப்படுகின்றன.சுரங்கத் தொழிலுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுகளை தாண்டி மலைகளை குடைந்தும்,பாறைகளை வெடி வைத்தும் தகர்க்கின்றனர். முறையான ஒப்புதல் இல்லாமல் கல்குவாரிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. குவாரி செயல்படும் இடங்களுக்கு அருகே உள்ள புறம்போக்கு நிலங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து குவாரி எல்லைக்குள் கொண்டுவந்து சுரங்கத் தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு செயல்படும் குவாரிகளுக்கு பின்புலமாக அரசியல் கட்சி முக்கிய நபர்கள் இருப்பதால் அரசியல், அதிகார அழுத்தம் , செல்வாக்கால் போலீஸ், அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். நிலக்கோட்டை, பழநி, நத்தம், திண்டுக்கல், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம், வேடசந்துார் உள்ளிட்ட இடங்களில் வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் ஆதரவோடு விதிமீறி குவாரிகள் நடத்தப்படுதாக விவசாயிகள், கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கனிமவளக் கொள்ளையைத் தடுக்கவும், முறைகேடான குவாரிகளை மூடவும் மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பொம்மைகளாக மாறிவிட்டனர்

Galleryமாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகள் எண்ணிக்கை பெருகிவிட்டது. குவாரிகளை சார்ந்து இயக்கப்படும் கனரக வாகனங்கள் சாலையில் அதிவேகமாக செல்வதால் பொதுமக்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. விதிமீறல் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாரந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் குவிகிறது. அதை சீராய்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டிய கலெக்டரும், கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தயக்கம் காண்பிப்பது ஏன் என புரியவில்லை. கனிம வள கொள்ளைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட அதிகாரிகள் அதை செயல்படுத்த தவறுகின்றனர். கனிம வள கொள்ளை விஷயத்தில் ஆளும் கட்சியினர், அரசியல் புள்ளிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாக அதிகாரிகள் மாறிவிட்டனர். முத்துக்குமரன், கிழக்கு மாவட்ட பா.ஜ.,பொதுச்செயலாளர்,திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ