பசுமையாகும் போக்குவரத்து அலுவலகம்
திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டில் திண்டுக்கல் மாவட்ட மண்டல போக்குவரத்து அலுவலகம் உள்ளது. புதர், வேண்டாத நச்சுசெடிகள் நிறைந்த இடமாக இருந்த அலுவலகம் இங்குள்ள அலுவலர்கள், அதிகாரிகளின் கூட்டு முயற்சியின்பேரில் நுழைவு வாயில் முதல் மண்டல அலுவலகம் வரையிலான புதர்களை அகற்றி சுற்றுச்சூழலுக்கும், பணிச்சூழலுக்கும் நன்மை பயக்கும் மரக்கன்றுகளை நட்டு பசுமை வனமாக மாற்றியிருக் கின்றனர். அலுவலக புதுப்பிக்கும் பிரிவுக்கு பராமரிப்புக்காக வரும் வாகனங்களிலிருந்தும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளிடம் இருந்தும் செடிகளை பாதுகாக்கும் வகையில் முக்கோண வடிவ ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. செடிகளின் செழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்த சொட்டுநீர் பாசனத்துக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வழக்கமான நடைமுறையின் கீழ் மரக்கன்றுகளை ஸ்பான்சர் பெற்று நட்டுவைக்காமல் மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சுற்றுச்சூழல் பொறுப்பு இருக்கவேண்டும் என்ற உறுதிமொழியின் படி, ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை சுய பங்களிப்பாக நட்டுவைத்து பராமரிப்பதுதான் இதில் சிறப்பாகும். பசுமை முயற்சி ேஷசாத்திரி, மண்டல போக்குவரத்து அலுவலக சட்டப்பிரிவு கண்காணிப் பாளர்: மரம் சூழ்ந்த இடத்தில் பணிபுரிவதே தனிசுகம் தரும். சுற்றிலும் மரங்கள் இருக்கையில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும். இயற்கையாகவே மரங்கள் சுழ்ந்த இடத்தில் அதிகம் காற்று வீசுவதால் மின்விசிறி பயன்பாடு குறைகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் மின் பயனீட்டு அளவுடன், மின் கட்டணமும் குறைகிறது. மரம் வளர்போம், மழைபெறுவோம் என அரசு பஸ்சில் வாசகம் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறோம். அப்படியிருக்கையில் அதற்கு எடுத்துக்காட்டாய் போக்குவரத்து அலுவலகம் இருக்கவேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான் இது. மண்டல அலுவலகத்தை சுற்றி 207 மரக்கன்றுகள் நட்டுவைத்திருக்கிறோம். இதில் 50 மரக்கன்றுகள் வனத்துறையிலிருந்து பெறப்பட்டவை, மீதி அலுவலக பணியாளர்கள் ஒவ்வொருவரும் அவரவர் சொந்த முயற்சியில் வாங்கிவந்து நட்டுவைத்ததாகும். பசுமை தோட்டமாக மாற்றுவதே இலக்கு ராமநாதன், போக்குவரத் து துறை பணியாளர்: சுற்றுச் சூழலுக்கும், பணிச்சுழலுக்கும் நன்மை தரும் மரங்கள், செடிகளைத்தான் நட்டுள்ளோம். ஆயில், கிரீஸ் என எண்ணெய் அழுக்கு படியும் என்பதால் சூழலுக்கு ஏற்ற மரக்கன்றுகள் நடவேண்டும் என்பதே எங்களது திட்டமாக இருந்தது. அதன்படி ஆல், அரசு, புங்கை, அத்தி, கடம்பை, கல்வாழை, தென்னை, அரளி என நாட்டு ரக மரங்கள் தான் நட்டுவைத்து பராமரிக்கிறோம். இவை அதிக கார்பன்டை ஆக்ஸைடை உள்ளிழுத்து துாய ஆக்ஸிஜனை வெளியிடும். இதுதவிர நுழைவு வாயிலில் செம்பருத்தி, செவ்வரளி, வெண் அரளி, அடுக்கு செம்பருத்தி, ஹைபிரிட் செம்பருத்தி, குரோட்டன்ஸ் செடிகளும் உள்ளன. வீணாகும் ஆயில் டிரம்களை பூத்தொட்டியாக பயன்படுத்துகிறோம். டயர்களை அலங்காரத்திற்காகவும், செடி பாதுகாப்பு வளையமாகவும் பயனுள்ள வகையில் மாற்றியிருக்கிறோம். அலுவலகத்தை பசுமை தோட்டமாக மாற்றுவதே இலக்கு.