வீடு அபகரிப்பு; ஒரு வழிப்பாதையை ரத்து செய்யுங்க குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் வாயிலாக முறையீடு
திண்டுக்கல்: வீட்டை அபகரித்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தையும், புதிய ஒரு வழிப்பாதை நடைமுறையை ரத்து செய்து பழைய பாதை வழியாக சுற்றுலா பயணிகளை வர அனுமதிக்க கோரி கொடைக்கானல் வியாபாரிகள் என 240 பேர் பல்வேறு பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக கலெக்டரிடம் முறையிட்டனர்.திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 240 மனுக்கள் பெறப்பட்டன. தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 8 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.உதவி ஆணையாளர் (கலால்) பால்பாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், முருகன், செல்வம், ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் கங்காதேவி கலந்து கொண்டனர். உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பழநியை சேர்ந்த தண்டபாணி கொடுத்த மனுவில், பழநியில் எனக்கு சொந்தமான வீட்டை எனது மகன் ஏமாற்றி அபகரித்துவிட்டார்.சரியாக உணவு கொடுக்காமல் வீட்டைவிட்டும் வெளியேற வைத்துவிட்டார். ஆதரவின்றி உடுமலைப்பேட்டை முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். மேலும் எனது வீட்டை முதியோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டத்தின் கீழ் மீட்டுத்தரும்படி பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை. வீட்டை மீட்டுத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுள்ளார்.கொடைக்கானல் பாம்பார்புரம், பசுமை பள்ளத்தாக்கு, பில்லர்ஸ் ராக், குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறு, குறு வியாபாரிகள் அளித்த மனுவில், கொடைக்கானல் நகருக்கு சுற்றுலா வாகனங்கள் வர ஒரு வழிப்பாதை செயல்படுத்தி உள்ளனர். இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கின்றனர். ஒரு வழிப்பாதை நடைமுறையை ரத்து செய்து பழைய பாதை வழியாக சுற்றுலா பயணிகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.