சாக்கடையில் மனிதக்கழிவுகள்; பழநி 32 வது வார்டில் சுகாதாரக்கேடு
பழநி: சாக்கடையில் மனிதக் கழிவுகள் கலப்பதால் பழநி நகராட்சி 32 வது வார்டில் சுகாதாதரக்கேடுடன் நோய் தொற்று உள்ளது.பழநி அடிவாரம் ,தில்லையாடி வள்ளியம்மை தெரு, ஆண்டவன் பூங்கா ரோடு, போகர் தெரு, அம்பேத்கார் வீதி பகுதிகளை கொண்ட இந்த வார்டில் நாய் தொல்லை அதிகம் உள்ளது.சிறுவர்கள், பெரியவர்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். சாலைகளை அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக அமைக்க வேண்டும். சுகாதார வளாகம் இல்லை
உதயசங்கர், வழக்கறிஞர், அம்பேத்கர் தெரு : தில்லையாடி வள்ளியம்மை தெரு, அம்பேத்கர் தெரு , போகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் சாக்கடை துார் வாரும் பணி சரியாக நடப்பதில்லை. பொது கழிப்பறை இல்லாததால் பெண்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெண்களுக்கான தனி சுகாதார வளாகத்தை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்கடையில் நேரடியாக மனித கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். மழைக்காலங்களில் மழை நீர் சாலைகளில் சாக்கடை நீருடன் கலந்து பூங்கா ரோடு வழியாக செல்வதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. அதனை சரி செய்ய பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். ரோட்டில் கழிவு நீர்
மாரிமுத்து, பொறியாளர், ஆண்டவன் பூங்கா ரோடு : இங்குள்ள பூங்கா ரோடை வார்டு மக்கள் மட்டுமன்றி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மழை காலங்களில் சாக்கடை கழிவு நீர் அதிக அளவில் பூங்கா ரோட்டில் செல்வதால் நோய் தொற்று அபாயம் ஏற்படுகிறது. ஆண்டவன் பூங்கா ரோடு வழியாக ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லை
ராம்குமார், எலக்ட்ரீசியன், தில்லையாடி வள்ளியம்மை தெரு :தில்லையாடி வள்ளியம்மை தெரு இரண்டாவது தெரு பகுதியில் குடிநீர் தொட்டி உடைந்துள்ளது. நாய் தொல்லை மிக அதிகம் உள்ளது. பெரியவர்கள் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் பாதாள சாக்கடை
முருகேஸ்வரி , கவுன்சிலர் (தி.மு.க.,) : எங்கள் வார்டில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜிகா பைப் லைன் அமைக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருவிளக்கு செயல்பாடு, குப்பை அகற்றுதல் முறையாக நடைபெற்று வருகிறது. சாக்கடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரைவில் சரி செய்யப்படும். பாதாள சாக்கடை விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.