விரக்தியில் விவசாயிகள் மழை நேரங்களிலும் நிரம்பாத நீர்நிலைகள் வரத்துகாய்வாய்ஆக்கிரமிப்புகளால் பாதிப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் மழை நேரங்களிலும் நிரம்பாத நீர்நிலைகளால் விவசாயம் செய்ய முடியாது விவசாயிகள் பரிதவிக்கின்றனர். மாவட்டம் முழுவதும் மலைகளால் சூழப்பட்டு இயற்கையின் எழில் மிகுந்த தோற்றமாக உள்ளது. இங்கு திண்டுக்கல்,வத்தலக்குண்டு,கன்னிவாடி,ஒட்டன்சத்திரம்,பழநி,நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி மாவட்டம் முழுவதும் மழை பெய்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள்,குளங்கள் நிரம்ப தொடங்கி உள்ளது. இந்தநேரத்தில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளால் ஏராளமான குளங்களில் தண்ணீர் நிரம்பாமல் உள்ளன. இதனால் இதை நம்பி விவசாயத்தில் ஈடுபட காத்திருக்கும் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இதை பராமரிக்க வேண்டிய உள்ளாட்சிகள்,பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்ன நடந்தால் நமக்கென்ன என மவுனமாக உள்ளனர். வெயில் காலங்களில் குளங்களை துார்வாராது, அணையில் கரைகளை பலப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணத்தினாலும் நீர் தேங்காமல் வழிந்து வெளியேறுகிறது. பலரும் அரசியல் செல்வாக்குகளால் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்,தனியார் நிறுவனங்களை தங்கள் இஷ்டத்திற்கு கட்டுகின்றனர். தட்டிக்கேட்கும் அதிகாரிகளையும் மடக்கி கைக்குள் போட்டுக்கொண்டு பலரும் இதேநிலையை கடை பிடிக்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல் நிலத்தை பாழ்ப்படுத்தும் கருவேல மரங்கள் நீர் வழித்தடங்கள்,குளங்களின் மையப்பகுதியில் மரமாக வளர்ந்துள்ளது. இவைகளை அகற்றவும் எந்த அதிகாரிகளும் முன்வருதில்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மழை நேரங்களில் பல ஓடைகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் நீர் வரத்து பாதை இருந்ததற்கான தடையமே இல்லாமல் அழிந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதன்மீது கவனம் செலுத்தி நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ........மீட்டெடுப்பது அவசியம்மாவட்டத்தில் ஆக்கிரமிப்பின் பிடியிலிருக்கும் குளங்கள்,கண்மாய்களின் நீர் வழித்தடங்களை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அப்படி அகற்றுவதன் மூலம் குளங்களின் நீர் நிரம்ப தொடங்கும். இதனால் அதனை சுற்றிய விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். குளங்களை நம்பி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பொதுப்பணித்துறை,உள்ளாட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வரக்கூடிய குளங்களை துார்வாரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தற்போது மழை நேரத்திலும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளால் பல குளங்களில் நீர் நிரம்பாமல் உள்ளது. இதைப்பார்க்கும் போது வேதனையாக உள்ளது. குளங்களை மீட்டெடுப்பது அவசியமாக உள்ளது.பாஸ்கரன்,அ.தி.மு.க.,கவுன்சிலர், திண்டுக்கல்...................