திண்டுக்கல், கொடையில் இடைவிடாது மழை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த மழையில் இரண்டு குடிசைகள் சேதமடைந்தன.மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று காலை 6:00 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. கனமழை பெய்யும் என எதிர்பார்த்த நிலையில் இரவு வரை இடைவிடாது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நத்தம், சிறுமலை, சின்னாளப்பட்டி, வேடசந்துார், பழநி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு உள்ளிட்ட இடங்களிலும் சாரல் மழை பெய்தது. பகல் முழுவதும் மழை பெய்ததால் வெயில் முகம் காட்டவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. விவசாயம், கூலி வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் வீட்டிலேயே முடங்கினர். தனியார் நிறுவன ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் மழையில் நனைந்தபடி வேலைக்கு சென்றனர். சாலைகள், கொடைக்கானல், பழநி, சிறுமலை சுற்றுலாத்தலங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. கோயில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. வாகனங்கள் பகல் நேரத்திலே முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. கொடைக்கானல் அருகே மரம் முறிந்து விழுந்தது. மழைக்கு இரண்டு குடிசைகள் சேதமடைந்தன. இதில் ஒருவர் காயமடைந்தார். கொடைக்கானல்: சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் மழை பெய்து வருகிறது. நேற்று சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் நேற்று காலை 6:00 மணிக்கு துவங்கிய மழை மாலை வரை இடைவிடாது பொய்தது. குறைவான சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் விடுதிகளிலே முடங்கினர். நகரை பனிமூட்டம் சூழ்ந்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது. இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டியது.