UPDATED : செப் 15, 2025 08:06 AM | ADDED : செப் 15, 2025 05:47 AM
மாவட்டத்தில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பண்டிகை சீட்டுகளில் சேர்வது வழக்கம். குறிப்பாக பெண்கள் பண்டிகை நேரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கு புது துணிமணிகள், நகைகள் எடுப்பது, பண்டிகை செலவுகளுக்கு என குறிப்பிட்ட தொகையை ஆண்டு முழுவதும் சேமித்து வைத்து அதை நேரங்களில் பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்தி சிட் பண்ட், ஏலச்சீட்டு, தீபாவளி நகை சீட்டு, சேமிப்பு சீட்டு என ஜவுளி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள் தொடங்கி தனி நபர்களும் புதிய புதிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்கின்றனர். எந்த விதமான அரசு அங்கீகாரம், பதிவுகள் செய்யாமல் நிதி நிறுவனங்கள் நடத்துகின்றனர். மேலும் வாங்கிய பணத்திற்கு ரசீதுகள் கொடுக்காமலும், வாய் மொழி உத்தரவாதங்களை கொடுத்தும், கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்தும், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுபோன்ற போலி நிறுவனங்களிடம் ஏமாறும் நபர்கள் போலீசில் புகார் கூட செய்ய முடியாத நிலையில் புலம்பி வருகின்றனர். சேமிப்பை தொடங்கும்போது பதிவு செய்யாத தனி நபர் சிட் பண்டுகளை தவிர்க்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் அரசு சட்ட விதிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்களை தேர்வு செய்து விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். போலீசாரும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகும்.