ரோடு அமைத்து 10 ஆண்டாச்சு... சேதமான ரோடால் தத்தளிக்கும் மக்கள்
வேடசந்துார்: சேனன்கோட்டையில் இருந்து பெருமாள் கவுண்டன்பட்டி வழியாக சமத்துவபுரம் செல்லும் தார் ரோடு அமைத்து 10 ஆண்டுகளாவதால் ரோடு சேதமடைந்து மக்கள் தத்தளிக்கும் நிலை தொடர்கிறது .வேடசந்துார் ஒட்டன்சத்திரம் மெயின் ரோட்டில் உள்ளது சேனன்கோட்டை. இங்கிருந்து பெருமாள் கோவில்பட்டி வழியாக சமத்துவபுரம் அடுத்து செல்லும் தார் ரோடு இரு கி.மீ., துாரம் உள்ளது. இந்த ரோட்டின் வழியாகத்தான் தனியார் வேளாண் கல்லுாரி செல்ல வேண்டும். இப்பகுதி மக்கள் மட்டுமின்றி கல்லுாரி மாணவர்களும் வந்து செல்கின்றனர். மினி பஸ் போக்குவரத்தும் உள்ளது. பள்ளி, கல்லுாரி வாகனங்கள் மட்டுமன்றி நுாற்பாலை வாகனங்களும் வந்து செல்கின்றன. இவ்வளவு போக்குவரத்து வசதிகள் நிறைந்த இந்த ரோடு, 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது படு மோசமாகசேதமடைந்துள்ளது. இந்த ரோட்டை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு சிரமம்
எம்.சுரேஷ், தி.மு.க., நிர்வாகி, வேடசந்துார்: தார் ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது படு மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த வழியாகதான் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி நுாற்பாலை செல்வோரும் வந்து செல்கின்றனர். இப் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் உற்பத்தி பொருட்களை டூவீலர்களில் கொண்டு செல்வதிலும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சேதமடைந்த தார் ரோட்டை அகற்றி புதிதாக ரோடு அமைக்க வேண்டும். புதர்காடாக காட்சி
வி.நெடுஞ்செழியன், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர், சேனன்கோட்டை: இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்துள்ள நிலையில் தற்போது மிக மோசமாக சேதமடைந்துள்ளது. பள்ளி ,கல்லுாரி வாகனங்கள் மட்டுமின்றி நுாற்பாலை வாகனங்களும் கூடுதலாக செல்கின்றன. இந்த வழித்தடத்தின் இரு புறங்களிலும் புதர்காடாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த ரோட்டை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.