ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணம் பழநியில் திருமாவளவன் பேட்டி
பழநி:''ஆட்சி அதிகாரத்தை நோக்கி பயணப்படுகிறோம், போராடுகிறோம்''என வி.சி.க., தலைவர் திருமாவளவன் கூறினார்.பழநிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த திருமாவளவன் நேற்று அதிகாலை வின்ச் மூலம் மலைக்கு சென்று விஸ்வரூப அலங்காரத்தில் சுவாமி தரிசனம் செய்தார். கால பூஜையில் பங்கேற்றார். போகர் சன்னதியில் வழிபட்டார். பின் படிப்பாதை வழியே இறங்கி புலிப்பாணி ஆசிரமத்தில் வழிபாடு செய்தார்.கிரி வீதி பகுதியில் சிறு வியாபாரிகள் அவரை சந்தித்து கோரிக்கைகளை தெரிவித்தனர்.பழநியில் அவர் கூறியதாவது: பழநியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் 16 ஆண்டுகள் வரை தொகுப்பு ஊதியத்தில் ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இவர்களை ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அடிவாரப் பகுதியில் கயிறு,பை, ருத்ராட்சம் விற்பனை நுாற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள், பெண்கள் வாழ்வாதாரமாக உள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றுகிறோம் என அவர்களை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். பழநி மேற்கு ரத வீதியில் அருந்ததியர் மடம், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆட்சி என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. தமிழக மக்கள் எப்போது வி.சி.க., மீது நம்பிக்கை வைக்கிறார்களோ, அப்போது ஆட்சி அதிகாரத்தை ஒப்படைப்பார்கள். ஆட்சி அதிகாரத்தை நோக்கி நாங்கள் பயணப்படுகிறோம், போராடுகிறோம்.வழக்கறிஞர் வெட்டப்பட்டது, ஆசிரியர் கொல்லப்பட்டது போன்ற கொடூரமான செயல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. இவற்றை கட்டுப்படுத்த தவறினால் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறும். தற்போதைய அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன என்றார்.
முதலமைச்சர் கனவு எனக்கும் உண்டு
ஆயக்குடியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: பழநியாண்டவரை தரிசிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதை பார்க்க வந்தேன், நேர்த்திக்கடன் செலுத்த வரவில்லை. அடிமை மக்களை ஆட்சி அதிகார பீடத்தில் அமரும் மக்களாக மாற்ற வேண்டும். எனக்கும் முதல்வர் பதவி கனவு உண்டு. இன்று முதல் புள்ளியை துவங்கியுள்ளோம். கட்சி துவங்காமலேயே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். நாம் அங்குலம் அங்குலமாக வளர்ந்து வருகிறோம். தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வளர்கிறோம். மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் வி.சி.க., கொடி பறக்கிறது. மக்களுக்கு நம் மீது நம்பிக்கை உருவாகி உள்ளது. அதை தக்க வைக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றார்.