உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி கோயிலில் காப்புகட்டுடன் துவங்கியது கந்த சஷ்டி விழா

பழநி கோயிலில் காப்புகட்டுடன் துவங்கியது கந்த சஷ்டி விழா

பழநி: பழநி முருகன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது . மதியம் 12:00 மணிக்கு உச்சிக்கால பூஜை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்களுக்கு அமிர்தலிங்க குருக்கள், செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் காப்பு கட்டப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் சுப்ரமணியன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே நேரத்தில் பெரியநாயகி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்ஸவருக்கும் காப்பு கட்டப்பட்டது. இதன்பின் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். சாயரட்சை பூஜைக்கு பின் தங்கச்சப்பர புறப்பாடு, தங்கரத புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ரோப்கார், வின்ச் வரிசையில் பல மணி நேரம், தரிசன வரிசையில் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். சூரசம்ஹாரம் விழாவின் ஆறாம் நாளான அக்.,27ல் முருகன் கோயிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, மதியம் உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜை, மதியம் 3:00 மணிக்கு மலைக்கொழுந்து அம்மன் சன்னதியில் பராசக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சிக்கு பின் கோயில் நடை அடைக்கப்படும். இதன்பின் சின்னகுமாரசுவாமி, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, அடிவாரத்தில் எழுந்தருள மாலை 6:00 மணிக்கு வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் ஆகிய நான்கு சூரர்களை சின்ன குமாரசுவாமி வதம் செய்ய சூரசம்ஹாரம் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெற சுவாமி கோயிலுக்கு வர ராக்கால பூஜை நடைபெறும். ஏழாம் நாளான அக்.,28 காலை 10:30 மணிக்கு முருகன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்று இரவு 7:00 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெறும். இதை தொடர்ந்து சுவாமி தங்க குதிரையில் உலா நடைபெறும். கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து அக்.,27 இரவு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி