கேரள சுற்றுலா பயணி கொடையில் இறப்பு
கொடைக்கானல் : - கொடைக்கானலில் விடுதி அறையில் கேரள டாக்டருடன் தங்கிய உறவினரான சுற்றுலா பயணி இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரளமாநிலம் சவுபர்ணிகாபாடுகாடைச்சேர்ந்தவர் சுனில் 50. திருச்சூர் அரசு மருத்துவக் கல்லுாரியில் டாக்டராக உள்ளார். இவர் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பகுதியை சேர்ந்த உறவினர் சுதீப் 47,உடன் நேற்று முன்தினம் கொடைக்கானலுக்கு காரில் வந்தார். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கிய நிலையில் இரவு மது அருந்திவிட்டு துாங்கி உள்ளனர். நேற்று அதிகாலையில் பார்த்த போது சுதீப் படுக்கையில் இல்லை. சுனில் தேடிய நிலையில் பாத்ரூம் கதவு உள் தாழிட்ட நிலையில் இருந்துள்ளது. விடுதி பணியாளர்களை வைத்து கதவை திறந்த போது சுதீப் சுயநினைவின்றி இருந்தார்.கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த நிலையில் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இறப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.