சோலையாய் மாறிய கோவிலுார் ஊராட்சி
குளக்கரைகள்,ரோட்டோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து சுற்று வட்டார பகுதிகளை பசுமையாக மாற்றியுள்ளனர் கோவிலுார் ஊராட்சியினர்.வேடசந்துார் ஒன்றியத்தின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளது கோவிலுார் ஊராட்சி. செல்லக்குட்டியூர், ராமநாதபுரம், தோப்புப்பட்டி, நல்லுார், சின்னராவுத்தன் பட்டி உள்ளிட்ட 52 குக்கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் பெரிய அளவிலான தொழிற்சாலைகள்,நுாற்பாலைகள் என எந்த தொழில் வளமும் இல்லாத நிலையில், விவசாயம் சார்ந்த பூமி ஆக உள்ளது. 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களைக் கொண்டு, செல்லக்குட்டியூர், சிக்கைய கவுண்டர் குளக்கரைகளில் 4ஆண்டுகளுக்கு முன்பே புளி, வேம்பு, புங்கை உள்ளிட்ட 750 மரக்கன்றுகளை நடவு செய்து தண்ணீர் விட்டு பராமரித்தனர். தற்போது அனைத்து மரங்களும் நன்கு வளர்ந்து அடர் தோப்பாக,அடர் வனமாக மாறியுள்ளது. புளிய மரங்கள், காய் காய்க்கவும் துவங்கியுள்ளது. பண்ணை குளம், பெருமாள் கோவில்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கின்றனர். ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்து பசுமையான ஊராட்சியாக மாற்றி உள்ளது. தோப்பாக மாறியுள்ளது
ஆர்.முருகேசன், ஊராட்சி துணைத் தலைவர்,கோவிலுார்: குளத்துப் பகுதிகளில் ஏராளமான மரக்கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளது. மரங்களின் செழுமை எங்களுக்கு மன அமைதியை கொடுக்கிறது. செல்லக்குட்டியூர் குளக்கரைகளில் 8 ஏக்கர் பரப்பளவில் புளி, வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்கள் தோப்பாக வளர்ந்துள்ளது. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள்,குழந்தைகள், அங்கே கூடி விளையாடுவதும் இளைஞர்கள் அமர்ந்து பேசுவதும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தொழிலாளர்களுக்கு நன்றி
என்.செல்வமணி, ஊராட்சி தலைவர்,கோவிலுார்: இந்த ஊராட்சியை பசுமை நிறைந்த ஊராட்சியாக மாற்ற வேண்டும் என்பது எங்களது முதல் நோக்கமாகும். எங்களது பணி காலத்திற்குப் பின்னும் நுாற்றாண்டுகளுக்கு மேல் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் புளி, வேம்பு, புங்கை உள்ளிட்ட பல்வேறு மரங்களை வளர்த்துள்ளோம். அந்த மரங்கள் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஊராட்சிக்கு வருவாயை ஈட்டி தரும். பண்ணை குளத்தில் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுத்து மக்கும் குப்பையை உரமாக்கி, விவசாயிகளுக்கு கிலோ ரூ.10 க்கு வழங்குகிறோம். மரம் வளர்ப்பில் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து பொது மக்களுக்கும், 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கும் நன்றி என்றார்.