நீர் வரத்தால் நிறையும் நிலையில் குடகனாறு அணை
வேடசந்துார்,: வேடசந்துார் அழகாபுரி குடகனாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து உள்ள நிலையில் 24.25 (74)அடியை எட்டி உள்ளதால் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது.இதனால் சுற்றுப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆத்துார், தாடிக்கொம்பு, வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. 1250 ஏக்கர் கொண்ட இந்த அணையில் 27 அடி தண்ணீர் தேக்கும் வகையில் 15 ஷட்டர்களுடன் அணை உள்ளது. இங்குள்ள இரண்டு கிளை வாய்க்கால்கள் மூலம் திண்டுக்கல் ,கரூர் மாவட்டங்களில் ஒன்பதாயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போதைய மழையால் அழகாபுரி அணைக்கு நீர் வரத்து வர துவங்கி உள்ளது.நேற்று காலை வரை 24.25 (74) அடி தண்ணீர் தேங்கிய நிலையில் அணைக்கு வினாடிக்கு 43 கன அடி தண்ணீர் வரத்துள்ளது. ஆத்துார் அணை நிரம்பியதால் இதன் உபரி நீரும் குடகனாறு அணைக்கு வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.அழகாபுரி முதல் வெள்ளியணை வரையிலான விவசாயிகள் ,வலது பிரதான வாய்க்காலில் பணிகளை முடித்து விரைவில் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.