டிரோன் மூலம் நில அளவை திண்டுக்கல்லில் தொடக்கம்
திண்டுக்கல்:நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் படி டிரோன் மூலம் நில அளவை பணிகள் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நேற்று தொடங்கியது.நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ் நக்சா எனும் திட்டத்தை 26 மாநிலம் ,3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 152 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் நில வளத் துறை செயல்படுத்துகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எம்.காலனியில் இத்திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. டிரோன் கேமராக்களை பயன்படுத்தி நில அளவை செய்து போட்டோ எடுக்கப்படும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இடங்களில் வருவாய், மாநகராட்சி பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் நில அளவை மேற்கொள்வர். நில உரிமையாளர்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு பின்னர் இறுதி செய்யப்பட்ட நிலஆவணங்கள் வெளியிடப்படும். அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.