கூடுதல் பாரம் ஏற்றி வந்த லாரிகள்; ரூ.1.75 லட்சம் அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் நரிப்பட்டியில் கூடுதலாக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகளுக்கு போக்குவுரத்து அதிகாரிகள் ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர்.ரெட்டியார்சத்திரம் சுற்றுப்பகுதிகளில் அதிகளவிலான லாரிகள் கூடுதலாக மணல்,ஜல்லிக்கற்கள்,கிரஷர் மணல்களை ஏற்றி செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் வட்டார பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் ரெட்டியார்சத்திரம் நரிப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரிந்தது. விசாரணையில் ரோடு வரி செலுத்தாததும் தெரிந்தது. இதை தொடர்ந்து 3 லாரிகளுக்கும் வரி வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து கூடுதல் பாரம் ஏற்றி வந்ததாக 3 லாரிகளுக்கும் ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.