தோழியாக பழகி 15 பவுன் நகை திருடிய மதுரை பெண் கைது
வத்தலக்குண்டு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தோழியாக பழகி வீட்டுக்கு வந்து சென்ற மதுரை பெண் 15 பவுன் நகையை திருடி கைதானார். வத்தலக்குண்டு காந்திநகரை சேர்ந்தவர் முருகவேல் 50. இவரது மனைவி செல்வி 49. இவர்களது மகள் கோவையில் வசிக்கிறார். தம்பதியர் செப்டம்பரில் பழநி கணக்கம்பட்டி சித்தர் சமாதி சென்றனர். அங்கு அவர்களுக்கு மதுரை திருநகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் மனைவி ஆரோக்கியமேரி அறிமுகமானார். நெருங்கி பழகியதால் ஆரோக்கியமேரி வத்தலக்குண்டில் உள்ள முருகவேல் வீட்டிற்கு வந்து சென்றார். கோவையில் உள்ள மகள் நகை அவர்களிடம் இருப்பதை அறிந்த ஆரோக்கிய மேரி பீரோ சாவியை திருடினார். முருகவேல் தம்பதியரிடம் மற்றொரு சாவி இருந்ததால் காணாமல் போன சாவியை பொருட்படுத்தவில்லை. முருகவேலும் செல்வியும் வெளியூர் சென்ற நேரத்தில் ஆரோக்கியமேரி இவர்கள் வீட்டிற்குள் புகுந்து நகையை திருடி சென்றார். போலீசார் அலைபேசி தடயங்களை வைத்து ஆரோக்கியமேரியை கைது செய்து 15 பவுன் நகையை மீட்டனர்.