பராமரிப்பின்றி பாழாகும் நாகம்பட்டி பெரியகுளம்
வேடசந்தூர்: நாகம்பட்டி ஊராட்சியில் உள்ள பெரிய குளத்தை முறையாக துார்வாரி கரையை உயர்த்தி செப்பெனிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.வேடசந்துார் பேரூராட்சியின் நகர் பகுதியை யொட்டி உள்ளது பெரியகுளம். வேடசந்துார் ஒட்டன்சத்திரம் ரோட்டில் உள்ள இந்த குளம் நாகம்பட்டி ஊராட்சிக்கு கட்டுப்பட்டதாகும்.இந்த குளம் நிறைந்தால் வேடசந்துார் நகர் பகுதி, ஆத்து மேட்டு பகுதியில் குடிநீர் பிரச்னை இருக்காது என்பது மக்களின் நீண்ட கால நம்பிக்கை. திண்டுக்கல் கரூர் இருவழி சாலைநான்கு வழி சாலையாக மாற்றப்பட்டபோது வேடசந்துார் நகர் பகுதிக்குள் இந்த ரோடு வரக்கூடாது என்பதற்காக நகருக்கு வெளியே அமைத்தனர். இதனால் இந்த ரோடு குளத்தின் நடுவே செல்கிறது . இதனால் குளம் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளது. இந்தக் குளத்தில் தற்போது கருவேல முட்கள் அடர்ந்து காணப்படுவதால் குளம் பராமரிப்பு இன்றி புதர்காடாக காட்சியளிக்கிறது. நகர் பகுதியில் உள்ள குளம் என்பதால் குப்பை கூடாரமாகவும் மாறி வருகிறது. இந்த குளத்தை முறையாக துார்வாரி கரையை அகலப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கான குளமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.எஸ். வி.முத்துச்சாமி, சமூக ஆர்வலர், விட்டல்நாயக்கன்பட்டி : நகர் பகுதியை யொட்டி உள்ள பெரியகுளம் மிகப்பெரிய குளமாகும். இந்த குளத்தில் நீர் நிறைந்தால் வேடசந்துார் நகர் பகுதி மட்டுமின்றி குன்னம் பட்டி, தம்மனம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை இருக்காது. இப்பகுதி மக்களின் நலன் கருதி குளத்தில் உள்ள முட்களை அகற்றி ஆழப்படுத்தி கரையை அகலப்படுத்த வேண்டும் .எஸ்.தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், நாகம்பட்டி ஊராட்சி: குளம் பகுதியில் தொடர்ந்து குப்பை கொட்டி வந்ததால் அதை தடுத்து குளத்திற்குள் வாகனங்களில் செல்ல முடியாதவாறு முட்களைப் போட்டு தடுத்துள்ளோம். இந்தக் குளத்தை ஆழப்படுத்தி கரையை அகலப்படுத்தி நகர் பகுதி மக்களின் நடை பயிற்சிக்கான பாதையாக மாற்ற வேண்டும் .பி. ராஜம்மாள், ஊராட்சி தலைவர்,நாகம்பட்டி ஊராட்சி: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் இந்த குளத்தை ஆழப்படுத்தி கரையை அகலப்படுத்த முயற்சி மேற்கொண்டோம். அதற்குள் மழை பெய்து தண்ணீர் வந்து விட்டதால் சேணன் கோட்டை குளத்தை துார்வாரினோம். வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜனிடம் குளத்தை துார்வாரி கரையை பலப்படுத்த கோரிக்கை வைத்தோம். அவரும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் குளத்தில் உள்ள முட்கள் அகற்றப்பட்டு துார்வாரி கரை பகுதியை ரோடு போல் மாற்றி நடை பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் என்றார்.