வசதிகள் இல்லை... குறைபாடுகள் ஏராளம் திணறலில் திண்டுக்கல் 27வது வார்டு மக்கள்
திண்டுக்கல்: குடிநீர் பற்றாக்குறை, சாக்கடை அடைப்பு என அடிப்படை வசதி குறைபாட்டில் தவிக்கிறது திண்டுக்கல் மாநகராட்சி 27வது வார்டு. நரிப்பாறை, மேட்டுப்பட்டி, பெரியார் நகர், மக்கான் நகர், நாராயண பிள்ளை சந்து, அங்குவிலாஸ் இறக்கம், மேல்பகுதி உள்ளடக்கிய இந்த வார்டில் சுகாதார சீர்கேடு நிரம்பி வழிகிறது. பெண்களுக்கான பொதுக்கழிப்பறை இல்லாதததால் திறந்தவெளியை நாடும் அவலம் உள்ளது. நரிப்பாறையில் இருக்கும் பொதுக்கழிப்ப்பறை கட்டட சுவர்கள் பெயர்ந்து சுற்றிலும் விரிசல் விழுந்துள்ளது. பராமரிப்பின்றி உள்ள இக் கட்டடம் எப்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ எந்த கட்சி வந்தாலும் எங்கள் நிலைமை இதுதான் என்கின்றனர் வார்டு மக்கள். குடிநீர் கிடைப்பதே அரிதாக சுந்தரி, நரிப்பாறை: ஆபத்தான நிலையில் உள்ள கழிப்பறையை இடித்து அகற்றிவிட்டு தற்காலிக பயன்பாட்டுக்கான பாக்ஸ் கழிப்பறை அமைத்து தருவதாக அதிகாரிகளும், கவுன்சிலரும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. குடிநீர் பிரச்னைக்கு போராடி அலுத்துவிட்டோம். ஒரு வீட்டுக்கு இரு குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது. குடிநீர் வரியை மட்டும் கறாராக வசூல் செய்யும் அதிகாரிகள் வார்டின் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். சிமென்ட் சாலையின் நடுவிலே குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. முதியோர் , சிறுவர்கள் கால் இடறி கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. சாக்கடையில் அடைப்பு குமரேசன், பா.ஜ.,மேற்கு மண்டல பொதுச்செயலாளர்: பாதாள சாக்கடை அடைப்பால் கழிவு நீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. அங்குவிலாஸ் இறக்கம் அருகே மெயின்ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதோடு சாக்கடையிலும் அடைப்பால் துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் துார்வாருவதில்லை. குப்பையும் அகற்றப்படுவதில்லை. ரோட்டில் கொட்டப்படும் குப்பை சாக்கடையில் விழுந்து குப்பை மேடாகுகிறது. நாராயணபிள்ளை சந்தில் துார்வாரி அள்ளப்பட்ட மண் சாக்குமூடைகளில் நிரப்பி அதே இடத்தில் வைக்கின்றனர். மழை வெயிலில்காய்ந்து மீண்டும் சாக்கடையில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. நிதி வராததால் பணிகளில் தாமதம் பாரதி, கவுன்சிலர் (காங்.,): வார்டில் தண்ணீர் பிரச்னை இருப்பது உண்மை. இதை சீர்செய்ய மேயர், ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளேன். கூட்டத்திலும் பேசியிருக்கிறேன். நரிப்பாறை பகுதிய கழிப்பறை இடித்து அகற்றும் பணியில் தாமதம் ஆகிறது. இதற்கு மாற்றாக மூக்கன் ஆசாரி சந்தில் உள்ள கழிபறைய சரிசெய்து கொடுத்துள்ளோம் . சுகாதாரம் காக்க கொசுத்தொல்லை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிச்சை தெரு, மக்கான் தெரு, ஒலியப்பர் ராவுத்தர் சந்து ஆகியவற்றில் சாலை அமைத்து கொடுத்துள்ளோம். ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி இன்னும் வந்து சேராததால் பணிகளில் தாமதம் உள்ளது என்றார்.