உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாய் தொல்லை; சீராக வராத குடிநீர் பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்

நாய் தொல்லை; சீராக வராத குடிநீர் பரிதவிப்பில் பழநி 15 வது வார்டு மக்கள்

பழநி: நாய் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் , சீராக வராத குடிநீர், நாய்கள் தொல்லை என பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் பாதிக்கின்றனர்.லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, ஓம் சக்தி கோயில் தெரு, ராஜா நகரை உள்ளடக்கிய இந்த வார்டில் பாறைகுழி பகுதியில் சாக்கடை சேதமடைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் பொதுக் கழிப்பிடமாக சிலர் பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் தொற்றும் உருவாகிறது.

விரைந்து முடியுங்க

கார்த்திக்,வணிகவரி அலுவலர், ராஜா நகர் : ராஜா நகர் பகுதியில் வீடுகளுக்கு முன் சாக்கடை வாட்டம் இல்லாமல் பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி இருந்தது. இதை சரி செய்யும் பணிகள் துவங்கியுள்ள நிலையில் விரைந்து முடித்து தர வேண்டும்.இதுபோல் பாதாள சாக்கடை திட்டத்தையும் விரைந்து அமைக்க வேண்டும். ராஜா நகர் பார்க் பின்புறம் சாலை சேதமடைந்துள்ளது. இதையும் சரி செய்து தர வேண்டும்.

குறைவாக வரும் தண்ணீர்

பொன்முருகன், டூவீலர் பணிமனை உரிமையாளர், லட்சுமிபுரம் : இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் .போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும். குடிநீர் குழாயில் தண்ணீர் குறைவாக வருகிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுத்து முறையான கால இடைவெளியில் குடிநீர் வழங்க வேண்டும்.

நாய் தொல்லை அதிகம்

சிவகுமாரன், வழக்கறிஞர், லட்சுமிபுரம் :லட்சுமிபுரம் பகுதியில் நாய் தொல்லை அதிகம் உள்ளதால் கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர்கள், முதியவர்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆங்காங்கே சேரும் குப்பையை அப்புறப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

கந்தசாமி, துணைத்தலைவர், மார்க்சிஸ்ட் : நகராட்சி பகுதி முழுவதும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நாய்களுக்கு உணவு அளித்து வரும் சிலர் அந்த நாய்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. ஜிகா பைப்லைன் திட்டம் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடிநீரில் அழுத்தம் குறைவாக வருவதற்கு 2 லட்சம் லிட்டர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது .பணிகள் முடிவுற்றதும் தண்ணீர் சீராக வரும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ