பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு
திண்டுக்கல்: வரத்துக்குறைவால் பன்னீர் திராட்சை விலை ஒரே மாதத்தில் 2 மடங்கு அதிகரித்து விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்துார், திண்டுக்கல் சுற்றுப்பகுதிகளில் 400 ஏக்கருக்கு மேல் பன்னீர் திராட்சை விவசாயம் நடக்கிறது.பின்னர் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது . ஆக.,ல் பெய்த மழையின் காரணமாக பன்னீர் திராட்சையில் தண்ணீர் கோர்த்து பழங்களில் வெடிப்பு ஏற்பட்டது. விலையும் கிலோ ரூ.25க்கு கீழ் குறைந்தது. ஏக்கரில் 6 டன் விளைச்சல் கிடைக்க வேண்டிய நிலையில் 3 டன் பழங்கள் வெடிப்புகளால் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். தற்போது பல இடங்களில் மழை குறைந்து வெயில் அதிகரிப்பால் கூடுதல் தேவை காரணமாக பன்னீர் திராட்சை விலை 2 மடங்கு அதிகரித்து கிலோ ரூ.50க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்தால் மேலும் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.