கிரிவீதியில் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்க திட்டம்
பழநி:பழநி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.பழநி முருகன் கோயில் கிரிவீதி 2.9 கி.மீ.,ல் உள்ளது.இதில் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் பாத விநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன் அருகே அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது வடக்கு கிரி வீதியில் பாதவிநாயகர் கோயிலில் இருந்து குடமுழுக்கு மண்டபம் வரை தற்காலிக நிழற் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.தேரோட்டம் நடக்கும் திருவிழா காலங்கள், காற்று அதிகம் வீசும் காலங்களில் நிழல் பந்தல் அகற்றப்பட்டு மீண்டும் அமைக்கப்படுகின்றன.இதை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் வடக்கு கிரிவீதி, அழகு நாச்சியம்மன் கோயில் கொடைக்கானல் ரோடு பகுதி கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது.இதன் மூலம் பக்தர்கள் சிரமமின்றி மழை, வெயில் காலங்களில் கிரிவலம் வர ஏதுவாக இருக்கும். இதே போல் ரோப் கார் பகுதி கிரி வீதியிலும் உயர் மட்ட நிழல் மண்டபங்கள் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.