இளம்பெண் இறப்பில் சந்தேகம் செம்பட்டி ஸ்டேஷன் முன் மறியல்
செம்பட்டி: இளம்பெண் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் செம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலில் ஈடுபட்டனர். செம்பட்டி அருகே திம்மிராயபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி விவேக் 30. இவருக்கும் வத்தலகுண்டு காமக்காபட்டியை சேர்ந்த நிஷாலினி 23,க்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 27 பவுன் தங்க நகை, சீர்வரிசை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். தற்போது பர்வீன் 4, என்ற மகன் உள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய நிலையில் நேற்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்து சாலை பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து விசாலினி இறந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி செம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசார் அலட்சியப்படுத்துவதாகவும், கணவர் விவேக், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை வலியுறுத்தி மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். நிஷாலினி உடலை மீட்ட போலீசார் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.