மாவட்டத்தின் முக்கிய ஆறான குடகனாறு கருவேல முட்களை அகற்றுங்க; மழைக்காலம் துவங்குவதற்கு முன் தேவை நடவடிக்கை
குடகுமலையில் உருவாகி, ஆத்தூர், ஆத்தூர் காமராஜர் அணை, செம்பட்டி, தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாக சென்று அழகாபுரி குடகனாறு அணையில் கலக்குகிறது. இங்கிருந்து வெளியேறும் நீர் , எஸ்.புதூர், திருக்கூர்ணம் வழியாக சென்று அமராவதி ஆற்றில் கலக்குகிறது. 106 கி.மீ., நீளம் கொண்ட இந்த குடகனாறு, ஒரு காலத்தில் வற்றாத ஜீவநதியாய், மணற்பாங்கான பகுதியாய் காட்சியளித்தது. செழிப்புடன் விளங்கிய இந்த குடகனாறு, தற்போது கருவேல முட்கள் நிறைந்த காடாய் வேடசந்தூர் நகர் பகுதிக்குள் கழிவு நீர் குட்டையாய் காட்சியளிக்கிறது. திண்டுக்கல் தோல் ஷாப் கழிவுநீர் மற்றும் நூற்பாலை கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டாலும் மழைக்காலங்களில் பலர் திறந்து விடுவதால், குடகனாறு மாசுபட்டுவிட்டது. அழகாபுரி அணைப்பகுதி முழுவதும் முட்புதர்களாய் காட்சியளிக்கின்றன. மாசடைந்த நீரை அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையில் தேக்கி வைக்கும் நிலையில், சுற்றுப்பகுதியில் உள்ள கிணறுகள், போர்வெல்கள் உள்ளிட்ட நீர்ப்பிடிப்புகள் எல்லாம், உவர்ப்பு நீராக மாறிவிட்டன. விவசாயம் என்பது கேள்விக்குறியாக மாறி வருகிறது. இந்த குடகனாற்று தண்ணீரை ஆடு மாடுகள் கூட குடிப்பதில்லை. குடித்தாலும் உடல் பாதிப்பு தான். குடகனாற்று பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, குடகனாற்று பகுதியில் உள்ள கருவேலமுட்களை, ஒட்டுமொத்தமாக அகற்றும் வகையில் மாவட்ட நிர்வாகமும் தன்னார் வலர்களும் இணைந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.