முறையாக இல்லை சாக்கடை, குடிநீர் பரிதவிப்பில் பழநி 33 வது வார்டு மக்கள்
பழநி: சாக்கடை , குடிநீர் வசதி முறையாக இல்லாததால் பழநி நகராட்சி 33 வது வார்டு மக்கள் சிரமம் அடைகின்றனர்.கிழக்கு பாட்டாளி தெரு, கே.வி ஸ்கூல் ரோடு, சையது ராவுத்தர் ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி ரோடு உள்ளடக்கிய இந்த வார்டில் பக்தர்களின் வருகை அதிகம் உள்ளதால் முக்கிய வீதிகளில் அவ்வப்போது நெரிசல் ஏற்படுகிறது. நடவடிக்கை எடுப்பதில்லை ரவிச்சந்திரன், டெய்லர், இட்டேரி ரோடு : வார்டு முக்கிய சாலைகளில் சாக்கடை சேதமடைந்து உள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உள்ளது. கொசுத்தொல்லை, தெரு நாய் தொல்லை அதிகளவில் உள்ளது .இதனை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை .இதனால் குழந்தைகள், பெரியவர்கள், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேவை கண்காணிப்பு கேமரா மாரிமுத்து, தனியார் ஊழியர், கிழக்கு பாட்டாளி தெரு: பாதாள சாக்கடை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஜிகா பைப் லைன் திட்டத்தில் குடிநீர் முறையாக வருவதில்லை. 20 நாட்களுக்கு மேல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . உடல் நல குறைவாக உள்ளவர்கள் வெளியில் சென்று தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. கண்காணிப்பு கேமரா பொருத்தி வெளி நபர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். நாய் தொல்லைக்கு தீர்வு நடராஜன் ,கவுன்சிலர் (அ.தி.மு.க.,) : பாதாள சாக்கடை நிறைவேற்ற நகராட்சியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறேன். கொசு மருந்து அடிக்கடி அடிக்கப்படுகிறது. நாய் தொல்லையை தீர்க்க நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் வலியுறுத்தி வருகிறேன். சாக்கடை கட்டி தர நகராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளேன் என்றார்.