உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாலை, சாக்கடை, தண்ணீர் வசதிகளில் பூஜ்ஜியம் அல்லாடுகிறார்கள் திண்டுக்கல் மாநகராட்சி 41வது  வார்டு மக்கள்

சாலை, சாக்கடை, தண்ணீர் வசதிகளில் பூஜ்ஜியம் அல்லாடுகிறார்கள் திண்டுக்கல் மாநகராட்சி 41வது  வார்டு மக்கள்

திண்டுக்கல்: அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, தண்ணீர் இல்லாமல் அல்லல்படுகின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 41வது வார்டு மக்கள். மேட்டுப்பட்டி பிரதான தெரு, காளவாசல் தெரு, எம்.ஆர்.சிட்டி, காளியம்மன் கோயில் தெரு, 10வது தெரு, 12வது தெரு, அந்தோணியார் தெருவை உள்ளடக்கிய இந்த வார்டில் பெரும்பாலான இடங்களில் துார்வாரப்படாது சாக்கடைகளில் மண் நிரம்பி காணப்படுகிறது. தெருவில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க இப்பகுதி மக்கள் கற்களை அடுக்கிவைத்துள்ளனர். தெருவிளக்கு சரியாக எரிவதில்லை. மின்கம்பம் வளைந்து நிற்கிறது. பலமான காற்று வீசும்போது ஆட்டம் காணும் அந்த மின்கம்பம் எப்போது கீழே விழுமோ என அச்சத்துடனே மக்கள் கடந்து செல்லவேண்டி உள்ளது.

கிடப்பில் போட்டுள்ளனர்

குமார், காளியம்மன் கோவில் தெரு: அடித்தட்டு மக்கள் வசிக்கும் இப்பகுதியில் பிரச்னைகள் கொட்டி கிடக்கிறது. ஆனால் அதை சரிசெய்து கொடுப்பதற்கோ, என்னவென்று பார்ப்பதற்கோ கவுன்சிலருக்கு நேரமில்லை. காளியம்மன் கோயில் தெரு, அந்தோணியார் தெருவில் சாக்கடை பிரச்னை, தண்ணீர் பிரச்னை அதிகம் உள்ளது. இதை நிவர்த்தி செய்ய பலமுறை கவுன்சிலரிடம் மனுகொடுத்துவிட்டோம். ஆனால் செய்வதில்லை. பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து சாலைகள் மோசமாக உள்ளது. பாதி தெருவிற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபற்றி கேட்டால் நிதி ஒதுக்கியாச்சு ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்கிறார்கள்.

சாக்கடையில் அடைப்பு

கோபால், பா.ஜ.,மேற்கு மண்டல தலைவர்: 400 வீடுகள் உள்ளன. 5 ஆயிரம் பேர் வசிக்கும் வார்டில் பெரும்பாலானவர்கள் மர அறுவை மில்லில் வேலை செய்யும் கூலி ஆட்கள். வார்டுக்குள் தண்ணீர் பிரச்னை தலைவலி தரும் அளவுக்கு உள்ளது. காளியம்மன் கோயில் அருகே மக்கள் பயன்பாட்டுக்கென அமைக்கப்பட்டுள்ள 3 தண்ணீர் தொட்டிகளில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மோட்டார் பழுது காரணமாக பயனற்று கிடக்கிறது. சாக்கடை துார்வாரப்படாததால் குப்பை அடைத்து கழிவு நீர் வெளியேற வழியின்றி ஸ்தம்பித்து நிற்கின்றன.

பிரச்னையை சரிசெய்ய முயற்சி

ஆரோக்கியமேரி, கவுன்சிலர் (தி.மு.க., ): தேவை உள்ள இடங்களுக்கு மாநகராட்சியின் நிதியை எதிர்பாராமல் எனது சொந்த பணத்தை செலவு செய்து குறைகளை நிவர்த்தி செய்துகொடுத்துள்ளேன். வார்டு மறுசீரமைப்பில் சுற்றியிருக்கும் மற்ற வார்டுகளில் இருந்து ஏராளமான தெருக்கள் 41வது வார்டோடு சேர்க்கப்பட்டது. பிரச்னைகள் உள்ள இடங்களுக்கு முதல் முன்னுரிமை அடிப்படையில் குறைகள் சரிசெய்து கொடுத்துவருகிறேன். பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் நடந்து வருகிறது. தெருக்களில் தார் சாலை அமைத்து தெருவிளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காளியம்மன் கோயில் தெருவில் பயன்பாடற்று கிடக்கும் தண்ணீர் தொட்டியை சீர்செய்ய மாநகராட்சியில் எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வார்டு மக்கள் பிரச்னையை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ