உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை அரசு கலை கல்லுாரியில் பாலியல் புகார்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சஸ்பெண்ட்

கொடை அரசு கலை கல்லுாரியில் பாலியல் புகார்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சஸ்பெண்ட்

கொடைக்கானல்:- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லுாரி விடுதி மாணவிகள், விரிவுரையாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் அரசு கலை அறிவியல் மகளிர் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியில் அனுமதி பெறாமல், அடிப்படை வசதி இல்லாமல் நுாலகம் தங்கும் விடுதியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபு செந்தில்குமாருக்கு அரசியல் செல்வாக்கு, உயர்கல்வித்துறை, தலைமை செயலக அதிகாரிகளின் பின்புலம் உள்ளதால் தற்காலிகமாக பல ஆண்டுகள் பணிபுரியும் கல்லுாரி விரிவுரையாளர்களை நிரந்தர பணியில் அமர்த்துவதாகக்கூறி தனது இச்சைக்கு துன்புறுத்தும் செயலும் நடந்து வந்துள்ளது.கல்லுாரி நுாலகத்தில் செயல்படும் விடுதியில் தங்கும் மாணவிகளை மிரட்டி அவர்களையும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தற்போது கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள், மாணவிகளுக்கு துன்புறுத்தல் உள்ளதாக தெரசா பல்கலை துணைவேந்தருக்கு அனுப்பியவர் பெயர் இல்லாத புகார் கடிதம் அனுப்பப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபுசெந்தில்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் கல்லுாரியை ஆய்வு செய்து அதன் அறிக்கையை கல்லுாரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். அதில் நுாலகத்தில் அனுமதி பெறாமல் செயல்படும் விடுதியை முடக்க உத்தரவிட்டுள்ளனர். தெரசா பல்கலை துணைவேந்தர் கலா கூறுகையில்,''கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் அனுப்பிய புகார் கடிதம் இதுவரை கிடைக்கவில்லை'' என்றார்.கல்லுாரி முதல்வர் எனோலா கூறுகையில், ''கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் சிபுசெந்தில்குமார் மீது எழுந்த புகாரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தற்போதைய புகார் காழ்ப் புணர்ச்சியால் புனையப்பட்டுள்ளது ''என்றார்.டி.எஸ்.பி., மதுமதி கூறுகையில், ''இதுவரை எவ்வித புகாரும் எனக்கு வரவில்லை ''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை