ஓராசிரியருடன் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
திண்டுக்கல்:நிரந்தர ஆசிரியர்களே இல்லாமல் பொறுப்பு ஆசிரியர் என ஓராசிரியருடன் இயங்கும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் கள்ளர் சீரமைப்பு துறையில் 285 பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு 24 மேல்நிலை, 24 உயர்நிலை, 22 நடுநிலை, 3 உண்டு உறைவிடப் பள்ளிகள், 200 பள்ளிகள் தொடக்கப்பள்ளிகளாக செயல்படுகிறது. பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது.இதில் சில பள்ளிகள் மூடப்படும் நிலையில் உள்ளது.ஆசிரியர்கள் கூறியதாவது : தொடக்கப்பள்ளிகள் பலவற்றில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் படி ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.பொறுப்பு ஆசிரியர் அல்லது ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஒரே ஆசிரியர் அனைத்து வகுப்புகளையும் நிர்வாக பணிகளையும், பிற பணிகளையும் கவனிக்கும் சூழல் உள்ளது.இது தவிர அவசர நேரங்களில் கூட விடுமுறை எடுக்க முடிவதில்லை. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 48 பள்ளிகளில் 8 பள்ளிகளில் தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் இல்லை. தலைமையாசிரியர் இல்லாத ஓராசிரியர்கள் பள்ளிகளாக 7, இடைநிலை ஆசிரியர் இல்லாத ஓராசிரியர் பள்ளிகளாக 13 உள்ளன. மாணவர்கள் நலன் போதிய ஆசிரியர்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.