அண்ணனை கொல்ல முயன்ற தங்கை, கணவருக்கு சிறை
திண்டுக்கல்:விருவீடு சென்மார்பட்டியில் நிலப்பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வீட்டில் துாங்கிய அண்ணனை கொல்ல முயன்ற தங்கை, கணவருக்கு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.விருவீடு சென்மார்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வனராஜா 40. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் சிறிதளவு நிலம் உள்ளது.இதை இவரது தங்கை நித்யா 33, கேட்க 2022ல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நித்யா தன் கணவரான உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்சுடன் சேர்ந்து வீட்டில் துாங்கி கொண்டிருந்த வனராஜாவை அரிவாளால் வெட்டி பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்றார்.இதுதொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.ராஜேஷ்சுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை,ரூ.6 ஆயிரம் அபராதம், நித்யாவிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.11,500 அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார்.