மண் திருட்டு வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் பால செந்தில்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. போலி அனுமதி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய நிலத்தில் சவுடு மண் அள்ளி செங்கல் தயாரிப்பதற்காக கொண்டு செல்லப்படுகிறது. மண் திருட்டை தடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கனிமவளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு புகார் அனுப்பினேன். தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு கனிமவளத்துறை இயக்குனர், கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி அக்.27 ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.