உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திருநெல்வேலியில் பூணுால் அறுப்பு சம்பவம் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கண்டனம்

திருநெல்வேலியில் பூணுால் அறுப்பு சம்பவம் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கண்டனம்

பழநி: திருநெல்வேலியில் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் அணிந்திருந்த பூணுாலை அறுத்ததை கண்டித்துள்ள தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு பிராமண ஸமாஜ நிறுவன மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து ஐயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:திருநெல்வேலி தியாகராஜநகர் பகுதியில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மகனை பூணுால் அணிந்து வரக்கூடாது என மிரட்டி, பூணுாலை வலுக்கட்டாயமாக இழுத்து அறுத்த அடையாளம் தெரியாத நபர்களின் செயலை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பூணுாலை அறுப்பது கோழைத்தனமான செயலாகும்.பூணுால் ஹிந்து சமூகத்தில் பிராமணர்கள் மட்டும் அல்லாது பல சமூகத்தினராலும் புனிதமாக போற்றப்படுவதாகும். அவ்வாறான பூணுாலை அறுப்பது மத உணர்வுகளை புண்படுத்தும். எங்கள் மத உரிமைகளை பாதிக்கும் செயலாகும். மேலும் பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகள் 196, 298 மற்றும் 299-களின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய செயல் எங்கள் சமூகத்திற்கு மட்டுமின்றி பூணுால் அணியும் இதர சமூகத்தினர் இடையேயும் அச்சத்தையும், பீதியையும், பாதுகாப்பில்லை என்ற உணர்வையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது.இத்தகைய செயல் சமுதாயத்தில் விரோத உணர்ச்சிகளை துாண்டிவிடும் விதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ரீதியிலும் உள்ளது. பிராமண சமூகம் என்றும் சட்டத்தை மதித்து மத நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் விரும்பி பேணிப்பாதுகாக்கிறது.ஆனால் இச்சமூகத்தை தாக்குவதையே பிரிவினைவாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். அனைத்து சமூகங்களை போன்று பிராமண சமூகத்தையும் காப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை, பொறுப்பு ஆகும். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது தக்க சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !