இணைய வழிக்கு மாறியும் தீராத இடைத்தரகர்கள் தொல்லை
ரெட்டியார்சத்திரம்: அரசு துறைகளில் லஞ்சம் தவிர்க்கவும், மக்கள் அலைக்கழிப்பை தவிர்க்கவும் இ-சேவை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை செயல்படுத்துவது மட்டுமின்றி சிறப்பு முகாம் மனுக்களுக்கு தீர்வு காண்பதிலும் அலுவலர்களின் அலட்சியத்தால் மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது. மக்கள் அலைக்கழிப்பை தவிர்க்க அரசு துறை பணிகள் இணைய மயமாக்கப்பட்டு வருகின்றன. வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சான்றுகள், வருவாய் துறை பிரிவு சார்ந்த சான்றுகள் உட்பட 194க்கு மேற்பட்ட சான்றுகளை இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற முடியும். இதற்கென ஒவ்வொரு விண்ணப்ப வகைக்கும் தேவையான தகுதி ஆவணங்கள் இணைப்பிற்கான பட்டியலும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. தாலுகா அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களில் இதற்கென சேவை மையங்கள் உள்ளன. ஊராட்சிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் உருவாக்கப்பட்ட சேவை மையங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு உதவிகரமாக இருந்தது. ஆட்கள் பற்றாக்குறை, செலவினம், உள்ளூர் அரசியல் செல்வாக்கு போன்ற செயற்கையான காரணங்களை கூறி உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்க சேவை மையங்கள் முழுமையாக செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. சமீபகாலமாக இப்பணிகளில் தனியார் மைய ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கூடுதல் வசூல், குளறுபடி மட்டுமின்றி முறைகேடு ஆவணங்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட புகார்கள் அதிகரித்துள்ளன. கலெக்டர் குறைதீர் முகாம் மட்டுமின்றி உங்களுடன் ஸ்டாலின் உட்பட பல சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. பல துறை அதிகாரிகளுக்கு நேரடியாக கோரிக்கை சென்றடந்தபோதும் இவற்றிலும் தீர்வு கிடைப்பதில்லை. அரசு துறை அலுவலகங்களில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. தகுதியான ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்த போதும் விண்ணப்பதாரர்களை நேரில் அலுவலகத்திற்கு வரவழைக்கின்றனர். செயற்கை காரணங்களைக் கூறி கூடுதல் கவனிப்பிற்கு வற்புறுத்துகின்றனர். முறைகேடுகளை களைய அரசு சட்டங்கள் வகுத்தபோதும் திட்டம் போட்டு வசூல், அலைக்கழிப்புகளால் மக்களை வதைக்கும் அவலங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.